கடகம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (16:09 IST)
கள்ளம் கபடமற்ற பேச்சால் கவர்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் 08.01.முதல் 25.07.2017 வரை உங்களுக்கு என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு புதிய மாற்றங்களையும், தைரியத்தையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். வாக்கு ஸ்தானத்தில் ராகு அமர்வதால் எடுத்தோம், கவிழ்தோம் என்றெல்லாம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொண்டு உங்களை விமர்சிப்பார்கள்.
எனவே வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். சில வேலைகள் தடைப்பட்டு முடிவடையும். ஓரு பக்கம் பணம் வந்தாலும் மற்றொரு பக்கம் அதற்கு தகுந்த செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். கண், காது, பல் வலி வந்துப் போகும். காலில் அடிப்படி வாய்ப்பிருக்கிறது. கண்ணில் சின்னதாக ஒரு தூசு விழுந்தால் அலட்சியமாக விட்டு விடாமல் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவது நல்லது. ஏனெனில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
உறவினர்களில் ஒரு சிலர் கூட நீங்கள் மாறி விட்டதாக கூறுவார்கள். முன்பு போல அவர் இல்லை. இப்போதெல்லாம் கோபப்படுகிறார் என்றெல்லாம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வந்துப் போகும்.
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பண உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் சீராகும். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். வேற்றுமதத்தவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
ராகுபகவான் உங்கள் சுக-லாபாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். புது வேலை அமையும். வங்கிக் கடன் கிடைத்து கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் முடியும்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல அவ்வப்போது இருப்பீர்கள். யாராக இருந்தாலும் நெருங்கிப் பழகுவதை தவிர்க்கவும்.
மாணவ-மாணவிகளே! மறதியால் மதிப்பெண் குறையும். நெருக்குத் தீணிகளை குறையுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. விளையாடும் போது சின்ன சின்ன காயங்கள் ஏற்படக்கூடும்.

கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். இரவில் நேரங்களில் அதிகம் கண் விழித்திருக்க வேண்டாம். கண்ணுக்கு கீழ் கரு வளையம் உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.
அரசியல்வாதிகளே! கட்சியில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு சாரர் உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.

கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள், கிசுகிசுகள் வந்தாலும் விரக்தியடையாதீர்கள். சுய விளம்பரத்தை விட்டு விடுங்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.
விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். வற்றிய கிணற்றில் நீர் ஊற கொஞ்சம் செலவு செய்து தூர் வார்வீர்கள். அக்கம்-பக்கத்து நிலத்துக்காரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, கெமிக்கல், ஆட்டோ-மொபைல் வகைகளால் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் விரயம் வரும். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.
யாருக்கும் கடன் தர வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்வீர்கள். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வெடிக்கும். சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தர வாய்ப்பிருக்கிறது.

உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த அதிகாரிகள் ஒருசில விஷயங்களை செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும் சட்டத்திற்கு புறப்பாக நீங்கள் எதையும் செய்துக் கொண்டிருக்காதீர்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்துக் கொண்டு தந்தையாருடன் மோதல்களையும், அவருக்கு ஆரோக்ய குறைவையும், வரவுக்கு மிஞ்சிய செலவுகளை தந்துக் கொண்டிருந்த கேதுபகவான் இப்போது ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். தந்தையாருடனான மனவருத்தம், மருத்துவச் செலவுகள் யாவும் நீங்கும்.
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். என்றாலும் குடும்பத்தில் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். அதேப் போல பிரச்னைகளை அடுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள்.
எதைத்தொட்டாலும் பிரச்சனை என்றெல்லாம் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து சில முடிவுகள் எடுக்கப்பாருங்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக பயன்படுத்துங்கள். வாகனத்தில் செல்லும் போது நிதானம் அவசியம். அரசு காரியங்கள் இழுபறியாகும். திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சஷ்டம-பாக்யாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதியிலேயே நின்று போன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். குழந்தை பாக்யம் உண்டாகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேது செல்வதால் சோம்பல், களைப்பு, ஏமாற்றம், பிறர்மீது நம்பிக்கையின்மை, பிரபலங்களுடன் பகைமை, வாழ்க்கை மீது ஒருவித கசப்புணர்வுகள் வந்துச் செல்லும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக் கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் புது அதிகாரியின் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள்.

இந்த ராகு-கேது மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையை புரிய வைப்பதாகவும் சகிப்புத் தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.

பரிகாரம்:
திருவாரூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீஅல்லியங்கோதையம்மை உடனுறை ஸ்ரீபுற்றிடங்கொண்டாரை தேய்பிறை பிரதமை திதி நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிக்கு உதவுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :