குரு பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

Mahalakshmi| Last Updated: வெள்ளி, 3 ஜூலை 2015 (15:05 IST)
கடல் கடந்துச் சென்றாலும் கலாச்சாரம், பண்பாட்டை விட்டுக் கொடுக்காதவர்களே! இதுவரை உங்களுக்கு எதிரி வீடான ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்க வைத்துடன், ஏறக்குறைய ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களை கூறு போட்டு பார்த்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு-7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் உங்களுக்குள் அடங்கிக் கிடந்த ஆற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்ப, சூழ்நிலைகள் அமையும். எதிலும் பிடிப்பில்லாமல் எதையோ இழந்ததைப் போல் வாடி, வதங்கியிருந்தீர்களே! இனி சுறுசுறுப்பாவீர்கள்.

அழகு, ஆரோக்யம் கூடும். முகம் மலரும். எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே! யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்பித் தவித்தீர்களே! பெற்ற பிள்ளையிடம் கூட பேசுவதற்கு பயந்து நடுங்கினீர்களே! உறவினர், நண்பர்களெல்லாம் வெற்றிலை, பாக்கிற்கு பதிலாக உங்கள் வீட்டு விஷயங்களை தானே மென்றார்கள். பலரால் பகடைக்காயாக உருட்டப்பட்டீர்களே! மற்றவர்களுக்காக இரக்கப்பட்டு ஏமாற்றங்களை சந்தித்தீர்களே! கொடுத்தப் பணத்தை கேட்கப் போய் பொல்லாப்பானதே!

அடிக்கடி விபத்துகளையும் சந்தித்தீர்களே! வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும். ஈகோவாலும், உப்புக்கு பிரயோஜனம் இல்லாத பிரச்னைகளாலும் கணவன்-மனைவி பிரிந்து இருந்தீர்களே! இனி சச்சரவு முடிந்து ஒன்று சேர்வீர்கள். மனம் விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக்கும். பழுதாகிக் கிடந்த வாகனம் ஓடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க முடியாமல் போன காரியங்களையெல்லாம் இனி முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். எதிர்ப்புகளெல்லாம் குறையும்.

உறவினர், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சங்கம், டிரஸ்டில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பேசி முடித்து பாதியிலேயே நின்று போன திருமணம் இனி நல்ல விதத்தில் முடியும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். மனைவிவழியில் இருந்து வந்த மனவருத்தங்களும் விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.


குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை இனி குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்யம் கூடும். மற்றவர்களைக் குறைக் கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.


குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்களால் நன்மை உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்குச் சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். பழைய கடன் பிரச்னையை தீர்க்க புது வழி, வகைப் பிறக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களைத் தாழ்திப் பேசியவர்களெல்லாம் திருந்துவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :