விக்ருதி வருட‌ப் பலன்கள் : மகரம்

Webdunia|
தொலை நோக்குச் சிந்தனையுள்ள நீங்கள், பரந்த மனசுக்குச் சொந்தக்காரர்கள். தன வீடான 2-ம் வீட்டில் குருவும், 4-ம் வீட்டில் சுக்ரனும், புதனும் அமர்ந்திருக்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கிக் கிடந்த பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். எவ்வளவோ கடினமாக உழைத்தும் எதுவும் ஒட்டவில்லையே என வருந்தினீர்களே! கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டாமல் போனதே!

எதிலும் ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் திறமையிருந்தும் முன்னுக்கு வரமுடியாமல் போனதே! அந்த நிலையாவும் இனி மாறும். உங்கள் பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பணபலம் கூடும். கடன் பிரச்சனை தீரும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள்.
சித்திரை மாதத்தில் வீட்டில் நல்லது நடக்கும். குலதெய்வ கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேச இனி நேரம் ஒதுக்குவீர்கள். கணவன் -மனைவிக்குள் அவ்வப்போது இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை இல்லையென வருந்திய தம்பத்தியர்களின் கவலையை போக்கும் வகையில் அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்ததே! வைகாசி, ஆனி மாதங்களில் நல்ல வரன் அமையும்.
9-ம் வீட்டில் சனி தொடர்வதால் தந்தையாரின் உடல்நிலை லேசாக பாதிக்கும். 6-ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் யோகம் உண்டாகும். ராகு 12-ல் மறைந்ததால் ஓய்வு நேரம் குறையும். 2.5.10 முதல் 3-ல் குரு அமர்வதால் முயற்சிகளில் சில முட்டுகட்டைகள் வரும். என்றாலும் விடாமல் உழைத்து வெற்றி பெறுவீர்கள். நெஞ்சுவலி, கால், மூட்டுவலி வந்துபோகும். உங்களின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக சிலர் நடந்து கொள்வார்கள். சகோதர வகையில் மனக்கசப்புகள் வந்துபோகும்.ஆவணி மாதத்தில் சொத்து வாங்குவீர்கள். ஆடி மாதத்தில் தந்தையுடன் வீண் வாக்குவாதங்கள் வரும். அரசுடன் மோதல், ரத்தசோகை, அசதி வந்துபோகும். விரையச்செலவுகளால் சேமிப்புகள் கரையும்.
புரட்டாசி மாதத்தில் எதிர்பாராத பணம் வரும். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருவார்கள். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் வராது என்றிருந்த பாக்கித்தொகை வந்துசேரும். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். போர்டிங், லார்ட்ஜிங், ஹோட்டல், வாகன உதிரிபாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமுண்டு.
உத்‌தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். தடைபட்ட பதவியுயர்வு ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும். சிலர் வேலையை உதிரி தள்ளிவிட்டு சொந்த தொழில் தொடங்குவீர்கள்.

கலைஞர்களே! அரசால் கவுரவிக்கப்படுவீர்கள். உங்களின் படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். கன்னிப்பெண்களே, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாதவிடாய்க்கோளாறு, ஒற்றைத்தலைவலி நீங்கும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். மாணாக்கர்களே! நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கும். கெட்ட பழக்கங்கள் விலகும். மதிப்பெண் அதிகரிக்கும்.
இந்த விக்ருதி ஆண்டு வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

பரிகாரம் :
விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் அருள்பாலிக்கு ஸ்ரீ பூவராகவப் பெருமாளை உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :