1. கட்டுரைகள்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Updated : வெள்ளி, 11 ஜூலை 2014 (13:57 IST)

கொலைகாரச் சிகரெட் - விபரீதப் புற்றுநோய் வேர்விட்ட கதை

புகையிலை ஒரு அமெரிக்கத் தாவரம். கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த பின்னர் அங்கே படையெடுத்த ஐரோப்பியர்கள் அங்கே இருந்த பூர்வகுடி இந்தியர்கள் புகையிலை பிடிப்பதைக் கண்டு அதைத் தாமும் பிடிக்கத் தொடங்கினர். அதன்பின் புகையிலை உலகெங்கும் பயிரிடப்பட்டு, பயன்பட்டு வந்தாலும் அதன் தீமைகளை அன்று யாரும் அறியவில்லை. முதல், முதலாக சிகரெட்டின் தீமைகளை அறிந்த நாடு, நாஜி ஜெர்மனிதான்.
 
1939இல் முதல் முதலாக நாஜி ஜெர்மன் விஞ்ஞானி ப்ரான்ஸ் முல்லர் (Franz H. Müller) சிகரெட்டுக்கும் கான்சருக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார். அத்துடன் நில்லாமல் வியப்பூட்டும் வகையில் அஸ்பெஸ்டாஸால் புற்றுநோய் வரும், செகண்ட்ஹாண்ட் ஸ்மோக்கிங்காலும் புற்றுநோய் வரும் என்பதை எல்லாம் நாஜி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதை எல்லாம் மற்ற நாடுகள் ஏற்க, பல பத்தாண்டுகள் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
 
"மாஸ்டர் ரேஸ் (master race)" எனப்படும் "உயர் ஆரிய வகுப்பை" உருவாக்கும் கனவில் இருந்த ஹிட்லருக்குச் சிகரெட் ஒரு பெரும் தீமையாகத் தோன்றியது. அதே சமயம் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள் இதெல்லாம் நாஜி பிரச்சாரம் எனச் சொல்லி இதைப் புறக்கணித்தார்கள். ஆனால் ஹிட்லர் சும்மா இருக்காமல் "புகையிலை எதிர்ப்பு மையம்" ஒன்றை தொடங்கினான். நிகோடினின் தீமைகள் அங்கே விரிவாக ஆராயப்பட்டு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.
 
1940களிலேயே ஜெர்மனியில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்குச் சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும், போலிசாரும் யுனிபாரம் அணிந்து இருக்கையில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டது. புகையிலை விளம்பரம் தடுக்கப்பட்டது. உலகில் இன்னமும் கூட பல நாடுகளில் இத்தகைய கடுமையான தடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இத்தனை செய்த ஹிட்லர், சிகரெட்டை ஒரேயடியாகத் தடை செய்யாத காரணம் சிகரெட் விற்பனையில் கிடைத்த வரி வருமானம் தான். உலகப் போரை நடத்த, சிகரெட் வரி அவசியமாக இருந்ததால், ஹிட்லர் அதைத் தடை செய்யாமல் விட்டுவிட்டான். போரில் நாஜி ஜெர்மனி தோற்றபின் அவர்களது ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. அதனால் சிகரெட்டின் தீமைகள் ஆராயப்படவில்லை. அது கெடுதலானது எனும் விஷயமே பலருக்கும் தெரியவில்லை. 1940, 1950களில் சிகரெட் விற்பனை கொடி கட்டிப் பறந்தது.

 
அதே சமயம் நுரையீரல் புற்றுநோய் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அமெரிக்க விஞ்ஞானிகள் சிகரெட்டுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அமெரிக்கப் புகையிலை உற்பத்தியாளர் சங்கம், இதைக் கடுமையாக மறுத்தது. 1950கள் முழுக்கச் சிகரெட்டுக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்து வரும் அறிவியல் ஆய்வுகளை இச்சங்கம் மறுத்தும் நிராகரித்தும் வந்தது. 
 
அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த ஆய்வுகளில் எலிகளைக் கூண்டில் விட்டு, சிகரெட் புகையைக் கூண்டில் செலுத்துவார்கள். சில மாதம் கழித்து எலிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும். ஆனால் "எலிகளை வைத்து நடத்தும் ஆய்வு மனிதர்களுக்குப் பொருந்தாது" எனச் சிகரெட் கம்பனிகள் சாதித்து வந்தன. மனிதர்களைக் கூண்டில் கட்டி வைத்து, சிகரெட் புகையை விட்டு ஆய்வு செய்ய முடியாது என்பதால் அவர்கள் கேட்டதுபோல், மனிதர்களை வைத்து ஆய்வுகள் செய்ய முடியவில்லை.
 
அறிவியலின் பக்கம் நின்றிருக்க வேண்டிய அமெரிக்க மருத்துவர்கள் சங்கம், சிகரெட் கம்பனிகள் பக்கம் நின்றது. மருத்துவர்கள் பலர், சிகரெட் விளம்பரங்களில் தோன்றி "சிகரெட்டில் கெடுதல் இல்லை" என விளம்பரம் செய்தார்கள். 
 
ஆனால் நுரையீரல் புற்றுநோய் விகிதங்கள் பெருகவும், சிகரெட் கம்பனிகளின் சுதி மாறத் தொடங்கியது. மக்களிடம் வாதாடுவதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை லாபி செய்யத் தொடங்கினார்கள். 1960இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கென்னடியிடம் "சிகரெட்டால் புற்றுநோய் வருமா?" எனக் கேட்கப்பட்டது. புகையிலை விவசாயிகளின் ஓட்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால் மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பினார் கென்னடி.
 
ஆனால் உலகின் மற்ற நாடுகளில் அமெரிக்கர்களுக்காகக் காத்திராமல் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாகப் புகையிலையால் புற்றுநோய் வரும் என அறிவித்ததும் வேறு வழியின்றி 1964இல் அமெரிக்க சர்ஜன் ஜெனெரல் "புகையிலையால் புற்றுநோய் வரும்" என அறிவித்தார். அதன்பின் வேறு வழியின்றி அமெரிக்க மருத்துவர் சங்கம் அதை ஏற்றுக்கொண்டது.
 
அதன்பின் புகையிலை பிடிக்கும் வழக்கம், கணிசமாகக் குறைந்தது. நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்தது போல் விமானங்களிலும் பொது இடங்களிலும் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிகரெட் கம்பனிகள் சும்மா இராமல் "பில்டர் சிகரெட்டால் கெடுதல் இல்லை" எனச் சொல்லிக்கொண்டு பில்டர் சிகரெட்டுகளை வெளியிட்டன. பில்டர் சிகரெட்டால் எப்பயனும் இல்லை என்பதை நிரூபிக்க மேலும் சில ஆண்டுகள் கழிய வேண்டி இருந்தது.
 
அதன்பின் மேற்கத்திய நாடுகளில் பிசினஸ் படுத்தவுடன், சிகரெட் கம்பனிகள் ஆசியச் சந்தையைக் குறிவைத்துக் களம் இறங்கின. இப்போது அங்கும் வரிகள், சட்டங்கள் மூலம் சிகரெட் விற்பனை கட்டுப்படுத்தப்படுகிறது. பல நாடுகளில் சிகரெட் கம்பனிகள் மேல் வழக்கு தொடரப்பட்டது. பல பில்லியன் டாலர்களை இழப்பீடாகக் கொடுத்த பின்னரே சிகரெட் தொழில் நசிவடையத் தொடங்கியது. ஆனால் 1940இல் நாஜி ஜெர்மனியில் தொடங்கிய சிகரெட்டுக்கு எதிரான போர், 1990களில் அமெரிக்காவில் ஒரு தெளிவான முடிவுக்கு வருவதற்குள் உலகில் பல மில்லியன் மக்கள் சிகரெட்டால் தம் உயிரை இழந்துவிட்டார்கள். உடல்நலம் பாதிக்கபட்டார்கள். குடும்பங்கள் சிதைந்தன. அரசும், மருத்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் மக்களின் உயிரில் எத்தனை அலட்சியமாக இருப்பார்கள் என்பதற்குப் புற்றுநோய்க்கு எதிரான இந்த யுத்தமே சான்று.