வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Modified: சனி, 26 ஜூலை 2014 (15:23 IST)

டெட்ராய்ட் நகரம் திவால் ஆனது எப்படி? மீளுவது எப்படி?

அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரம் திவால் ஆகிவிட்டது. கம்பனிகள் திவால் ஆகும், தனி மனிதர்கள் திவால் ஆவார்கள். ஆனால் நகரமே திவால் ஆனால் என்ன ஆகும்? அதுதான் டெட்ராய்ட்டில் நடந்தது. டெட்ராய்ட் மாநகராட்சியிடம் தன் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் கொடுக்க காசில்லை. கடன் கொடுத்து வந்த வங்கிகள் எல்லாம் கடனைத் திருப்பிக் கேட்டன. நகராட்சியின் அனைத்துச் சொத்துகளும் அடமானம் வைக்கப்பட்டன. அடமானம் வைக்க இனி எதுவும் இல்லை என்ற நிலையில் டெட்ராய்ட் மஞ்சள் கடுதாசி கொடுத்தது.
 
கம்பனி ஆனால் இழுத்து மூடலாம். மாநகராட்சியை என்ன செய்வது? இப்படி ஒரு குழப்பத்தை அமெரிக்க திவால் கோர்ட்டுகள் சந்தித்தது இல்லை எனும் அளவு குழப்பம். நகரில் வசித்து வந்த பெரும் பணக்காரர்கள் என்றோ நகரை விட்டு ஓடியிருந்தார்கள். வரி விதிக்கக் கூட அங்கே பணக்காரர்கள் கிடையாது. வீடுகளை விற்க முடியாதவர்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு ஓடினார்கள். அதனால் வீட்டு வரியும் போட முடியாது. 
 
டெட்ராய்ட் மாநகரம் ஒரு எமெர்ஜென்ஸி மேனேஜரின் கைக்கு வந்ததும் மாநகராட்சியில் நடந்த பல தவறுகள் வெளிச்சத்துக்கு வந்தன. அரசு ஊழியர்கள், பென்சனர்கள் ஒட்டைப் பெறுவதற்காக மேயர்கள் 13ஆவது மாதச் சம்பளம் ஒன்றை வருடா, வருடம் வழங்கி வந்தார்கள். 10, 20 வருடம் வேலை பார்த்து 55 வயதில் சம்பளத்தில் 90% பென்ஷன் தொகையுடன் ரிடையர் ஆகலாம் எனும் நிலை அங்கே நிலவியது. அதனால் டெட்ராய்ட்டில் பென்ஷன் வாங்குபவர்கள் அதிகம். அரசு ஊழியர் சம்பளம், பெனிபிட்டுகள் அதிகம். ஆனால் இந்தச் செலவுகளை எல்லாம் ஈடுகட்டும் வகையில் மாநகராட்சிக்கு வருமானம் வரவில்லை.
 
இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து மீள, எமெர்ஜென்ஸி மேனேஜர் கெவின் ஆர் பல நடவடிக்கைகளை எடுத்தார். முதலாவதாக 13ஆவது மாதச் சம்பளம் / பென்ஷனை நிறுத்தினார். இதற்கே பெருத்த ஆட்சேபம் எழுந்தது. ஆனால் கோர்ட்டு அந்த நடவடிக்கை சரிதான் எனச் சொல்லிவிட்டது. சம்பளம் கொடுக்கவே காசு இல்லாதவர் போனஸ் எப்படி கொடுக்க முடியும்?

 
அடுத்ததாக பென்ஷனர்களிடம் "பென்ஷனில் 4.5% வெட்டும், வருடா வருடம் கிடைக்கும் விலைவாசி உயர்வுக்கான அட்ஜஸ்ட்மென்ட் தொகையும் கிடைக்காது. இதற்கு ஒத்துக்கொண்டால் பென்ஷனில் சிக்கல் வராது" என ஒரு ஒப்பந்தம் போட்டார். முழு பென்ஷனும் வராது என்ற பீதியில் இருந்த பென்ஷனர்கள் இதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்கள்.
 
அடுத்ததாக டெட்ராய்ட் முழுகும் நிலையில் அதற்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார் எமெர்ஜென்ஸி மேனேஜர். அவர்களுக்கு அசலும் இல்லை வட்டியும் இல்லை என்ற நிலை.
 
அதன்பின் மாநகராட்சிக்குத் தண்ணீர் பில் செலுத்தாமல் சுமார் 1.25 லட்சம் வீடுகள் பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் பறந்தது. அவர்கள் பல வருடங்களாகத் தண்ணீர்க் கட்டணம் செலுத்தவில்லை. இன்று மாநகராட்சியும் திவால் என்ற நிலையில் கட்டணத்தை வசூல் செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை. கட்டணம் செலுத்தாதவர்கள் தண்ணீர் இணைப்பு துண்டிக்கபட்டது.
 
அதுநாள்வரை சும்மா இருந்த சில மனித உரிமை அமைப்புகளும், ஹாலிவுட் நடிகர்களும் உடனே கொதித்து எழுந்தார்கள். "தண்ணீர் இணைப்பைத் துண்டிப்பது மனித உரிமை மீறல்" என ஐநா சபையிடம் புகார் கொடுத்தார்கள். ஐநா சபையும் ஒரு குழுவை டெட்ராய்ட்டுக்கு அனுப்பியது. அதில் சீனா, வட கொரியா மாதிரி "மனித உரிமைகளுக்குப் புகழ் பெற்ற" நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தார்கள். அவர்களும் "இது மனித உரிமை மீறலே" எனச் சொல்லிவிட்டார்கள்.
 
ஆனால் தண்ணீர் பெறுவது மனித உரிமை எனச் சொன்னவர்கள், தண்ணீர்க் கட்டணம் செலுத்தாமல் இருப்பதும் மனித உரிமையா, இல்லையா என்பதையும் தண்ணீர்க் கட்டணத்தை செலுத்தாமல் எப்படி மாநகராட்சியை நடத்துவது என்பதையும் சொல்லாமல் போய்விட்டார்கள். அதற்கு எல்லாம் அசராத மேனேஜர் கெவின் ஆர் "தண்ணீர்க் கட்டணம் இல்லையெனில் தண்ணீர் இல்லை" என்ற எளிமையான சூத்திரத்தை அமல்படுத்தப் போவதாகக் கூறிவிட்டார். அவர் தான் என்ன செய்வார்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?
 
சிக்கல்களைச் சமாளித்து, டெட்ராய்ட் மேலே வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.