வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Written By Author செல்வன்
Last Updated : திங்கள், 21 ஜூலை 2014 (13:21 IST)

மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி, மைக்ரோசாப்ட் ஆட்குறைப்பு, ஆப்பிளின் ஐவாட்ச்

மலேய விமான விபத்து உலகெங்கும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி இருக்கும் நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி ரஷ்ய தீவிரவாதிகள் கையில் சிக்கியிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. கருப்புப் பெட்டி என்பது விமானத்தின் அனைத்துத் தகவல்களையும், விமானி அறையில் நிகழும் அனைத்துப் பேச்சு வார்த்தையையும் பதிவு செய்யும் கருவியாகும். விபத்து ஏன் நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய இது உதவும்.
 
விமானம் வெடித்துச் சிதறினாலும், கடலின் ஆழத்தில் வீழ்ந்தாலும் கருப்புப் பெட்டி பாதிப்படையாது. ஆக இத்தகைய வலுக் கொண்ட கருப்புப் பெட்டியைத் தீவிரவாதிகளால் சேதப்படுத்த முடியுமா?
 
கருப்புப் பெட்டி தான் இருக்கும் இடத்தின் சிக்னலை 30 நாட்களுக்குக் கொடுத்துகொண்டிருக்கும். ஆக, கருப்புப் பெட்டி சிக்னலை வைத்தே தீவிரவாதிகளைப் பிடிக்க முடியும். ஆனால் அவர்களைப் பிடிக்க எந்த ராணுவமும் அப்பகுதியில் இல்லை என்பதால் இவ்விஷயத்தில் தீவிரவாதிகள் தப்பி விட்டார்கள். மற்றபடி பூகம்பம், கடல், நெருப்பு ஆகியவற்றால் பாதிப்படையாத கருப்புப் பெட்டியை அதன் முக்கிய பகுதிகளைக் குறிவைத்துத் தாக்கினால் செயலிழக்க வைக்க முடியும். கருப்புப் பெட்டி இந்த விமான விபத்தின் முக்கிய ஆதாரமாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 
*****************************
 
மைக்ரோசாப்ட் கம்பனி சமீபத்தில் 12,000 தொழிலாளரை பணிநீக்கம் செய்துள்ளது. இது அக்கம்பனியின் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத சம்பவம். பில்கேட்ஸ் 90களிலேயே இணையம் மைக்ரோசாப்டுக்கு பாதிப்பாக அமையும் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதன்பின் பொறுப்புக்கு வந்த ஸ்டீவ் பால்மர், ஆப்பிள் கம்பனியைக் காப்பியடித்து, சர்ஃபேஸ் டாப்ளட், விண்டோஸ் போன் முதலானவற்றை வெளியிட்டார். பலரது எச்சரிக்கையையும் மீறி, நஷ்டத்தில் தள்ளாடிக்கொண்டிருந்த நோக்கியா கம்பனியை வாங்கினார்.
 
சர்பேஸ், விண்டோஸ் போன்கள் முதலானவை தோல்வியைத் தழுவின. விண்டோஸ் 8 ஆபரேடிங் சிஸ்டமும் தோல்வியைத் தழுவியது. விண்டோஸ், எம்.எஸ். ஆபிஸ் முதலியவற்றை மட்டுமே நம்பி கம்பனி நடக்கும் நிலை. இந்தச் சூழலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா, மைக்ரோசாப்ட் சி.இ.ஓ.வாகப் பொறுப்பு ஏற்றார். புதிய மாடல் சர்பேஸ் டேப்ளெட்டுகள் சந்தையில் வெளியாகின. ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடாமல் லேப்டாப்புகளுக்கு மாற்றாக இவை அறிமுகப்படுத்தப்பட்டதால் சந்தையில் இவற்றுக்கு வரவேற்பு உருவானது. விண்டோஸ் பிளாட்பாரத்தை இலவசமாக கொடுத்ததால் ஆன்ட்ராய்டுக்குப் போட்டியாக வின்டோஸ் புகழ்பெறும் வாய்ப்பும் சந்தையில் அதிகரித்துள்ளது.
 
மைக்ரோசாப்ட் இத்தனை நாளும் செய்ய முனையாத வகையில் எம்.எஸ்.ஆபிஸை ஐபேட் ஆப் ஆக வெளியிட்டார் சத்யா நாதெல்லா. இதன் மூலம் பெருகிவரும் டேப்ளட் சந்தையில் எம்.எஸ் ஆபிஸின் சந்தை மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு கூடியுள்ளது. அதன்பின் நோக்கியாவில் இருந்து பெரும்பாலானோரைப் பணிநீக்கம் செய்து, நோக்கியா டிவிஷனை லாபத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சத்யா நாதெல்லா.
 
விண்டோஸ் 8 மூலம் டெஸ்க்டாப், லேப்டாப்புகளை டச் ஸ்க்ரீன் மாடலுக்குக் கொண்டுசெல்லும் முயற்சி, மைக்ரோசாப்டில் தொடங்கியது. அது ஒரு தோல்வி அடைந்த முயற்சி. விண்டோஸ் 9 மூலம் அதை எவ்வாறு எதிர்கொள்வார் சத்யா நாதெல்லா என்பதைக் கவனிக்க வேண்டும். இப்போதைக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு மைக்ரோசாப்டை முன்னுக்குக் கொண்டுவரும் சத்யா நாதெல்லாவைப் பாராட்டுவோம்.

*****************************

 
மைக்ரோசாப்ட் இப்படி போராடுகையில் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் ஆப்பிளின் சவால்கள் வேறு மாதிரியானவை. ஐபோன், ஐபாட், ஐபேட் எனப் பல ஹிட்களைக் கம்பனி கொடுத்து இருந்தாலும் பல வருடங்களாகப் புதிய ஹிட்கள் எதையும் அக்கம்பனி தரவில்லை. ஐவாட்ச் (iWatch) எனும் பெயரில் ஒரு ஸ்மார்ட் வாட்ச்சை சந்தையில் அக்கம்பனி அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிகிறது. 2014 செப்டெம்பர் மாதம் ஐந்து இஞ்சு ஸ்க்ரீன் சைஸின் ஐபோன் 6 வெளியாகவுள்ளது. அதன் ஸ்க்ரீன் மிகப் புதுமையான சப்பையர் எனும் பொருளால் தயாரிக்கப்படுவதால் அதைக் கீழே போட்டு மிதித்தாலும் ஸ்க்ரீன் உடைவது கடினம் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 6க்குப் பின் அக்கம்பனி எத்திசையில் செல்லும் என்பது ஐவாட்ச்சின் கையில் தான் உள்ளது.
 
சந்தையின் இன்னொரு போட்டியாளரான கூகுள் ரோபோட், டிரைவர் இல்லாத கார்கள் என மிகப் புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
 
ஆக, டெனாலஜி போட்டியின் அடுத்த ரவுண்டு சூடு பிடிக்கிறது. புதிய பல பொருட்களை வரவேற்கத் தயாராவோம்.