சிறுவன் சிபிக்கும் பப்பி மோடிக்கும் டு‌ம்,,, டு‌ம்,,,

Webdunia|
மக்களிடம் பல்வேறு நம்பிக்கைகள். இவை பாரம்பரியமாக அவர்களின் அடிமனதில் ஆழப்பதிந்துவிட்டவைகள்... இ‌தி‌ல் ஒ‌ன்றுதா‌ன் தீய ஆவிகளை விரட்ட சிறுவனுக்கும் நாய்க்கும் நட‌ந்த கல்யாணம்.

இவை மற்றவர்களுக்கு கேலிக்கூத்தாக இருக்கலாம். மூடத்தனமானதாக இருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகளிலேயே வாழ்கின்றவர்களுக்கு இவை புனிதமானவைகள். அதுவும் இயற்கையுடன் ஒன்றி காடுகளில் வாழும் பழங்குடியினர் பல நம்பிக்கைகளில் வாழ்கின்றனர்.

இவை நமக்கு விசித்திரமாகவும், மூட நம்பிக்கையாக இருக்கலாம்.இவை அந்த பழங்குடி மக்களுக்கு உயிர் மூச்சாக உள்ளது.

ஒரிசா மாநிலத்தில் ஜெகத்சிங்பூர் என்ற நகரம் உள்ளது. இங்கு ஒரு வயது சிறுவனுக்கும் ஆறு மாத நாய்க்குட்டிக்கும் திருமணம் நடந்துள்ளது.

ராதா மோகன் சிங்- கீதா சிங் தம்பதியினரின் ஒரு வயது மகன் சிபு தான் மணமகன். மணமகள் ஆறு மாத நாய்க்குட்டியான மோதி.இந்த திருமணத்தை முன்டா சாகி என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டு சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார்.

மணமகள் மோதி மஞ்சள் நிறத்தில் சேலை கட்டி நளினமாக நடந்து வந்து, மணமகன் சிபிக்கு அருகில் அமர்ந்தாள். அந்த கிராம மக்கள் வாழ்த்த இவர்களின் திருமணத்தை பழங்குடி மக்களின் புரோகிதர் நடத்தி வைத்தார்.

மணமகனின் தந்தை ராதா மோகன் சிங். தனது மகனின் திருமணத்தை பற்றி கூறும் போது, இந்த பழக்கம் பழங்குடி மக்களுக்கு புதிதல்ல. நான் எனது மகனுக்கு எந்த நோய் நொடி வராமல் இருக்கதான் மோதியுடன் திருமணம் நடத்தி வைத்தோம். நாங்கள் குழந்தைக்கு முதல் பல் முளைத்தவுடனேயே இது மாதிரி திருமணம் நடத்துவோம். நான் இனி எனது மகனையும், மருமகளையும் நன்கு பார்த்துக் கொள்வேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
மாமியார் கீதா சிங் கூறுகையில், எனது மருமகளையும் ஒரு குழந்தையாகதான் நினைக்கின்றேன். எனது மகனை, மருமகள் கெட்ட ஆவிகளிடம் இருந்து காப்பாற்றுவாள் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

திருமண விருந்தில் மணமகளான நாய்க்குட்டி மோதிக்கு இறைச்சி துண்டும் ரொட்டியும் கொடுக்கப்பட்டன. மணமகன் சிபிக்கு பாட்டிலில் பால் கொடுக்கப்பட்டது.
மணமகளுக்கு தங்க மோதிரம், ரேடியோ மற்றும் வீட்டிற்கு வேண்டிய சமையல் பாத்திரங்கள் பரிசாக கொடுக்கப்பட்டன.

இந்த திருமணம் மாவட்ட ஆட்சியாளர் வீட்டில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் தான் நடந்தது.

இதை பற்றி மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்.பி.கே.மெக்ராடா கருத்து தெரிவிக்கையில், பழங்குடி மக்களிடம் உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இது என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :