குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்!

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (19:54 IST)
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியத்தை தந்துவிடாது என்பதற்கு ஏற்பதான் இந்தியாவின் நிலையும் உள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகின் ஏழை நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளதாகவு‌ம் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் இந்திய‌ப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையிலும், வளர்ச்சியின் பலன் சாமானிய மக்களைச் சென்றடையாததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகமாக இந்தியாவில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி, குழந்தை இறப்பு விகிதத்தை கட்டாயம் குறைக்க உதவாது என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது, ஆண்டுதோறும் உலகில் 5 வயது பூர்த்தியடையாத குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கை 1 கோடியாக உள்ளது என்றும், இதில் 99 விழுக்காடு குழந்தைகள் வளரும் நாடுகளைசேர்ந்தவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
பல நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியின் பயன்களை சமுதாயத்தின் அனைத்து நிலையில் உள்ள மக்களும் பெறும் வகையில் கொண்டு போய் சேர்க்காததே இந்த நிலைக்கு காரணம் என்றும், வாழ்கை என்பது பரிசுச் சீட்டு விழுவதைப் போன்று உள்ளதாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த டேவிட் மீஃபம் தெரிவித்து உள்ளார்.
உலகின் ஏழை நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள் கூட எளிமையான கொள்கைகள் மூலம் திட்டங்களை தீட்டி குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்துள்ளன. ஒரு குழந்தை 5 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பு என்பது அக்குழந்தை எந்த நாட்டில், எந்த சமூகத்தில் பிறக்கின்றது என்பதை பொறுத்துதான் உள்ளது என்றும் டேவிட் மீஃபம் கூறியுள்ளார்.
செல்வமும், வாழ்தலும் தொடர்பான ஐ,நா. மேம்பாட்டுத் திட்டத்தின் அறிக்கைபடி, உலகில் உள்ள நாடுகளின் பட்டியலில் அங்கோலா கடைசியில் முதலாவதாக உள்ளது. அங்கோலா நாட்டின் பொருளாதார பலன் சமமான விகிதாச்சாரத்தில் வெளிப்படையாக பிரித்துக் கொடுக்கப்படும் நிலை உருவாகுமானால் அந்நாட்டில் 5 வயதை எட்டாமல் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
உலகின் ஏழை நாடுகள் என்று அழைக்கப்படும் நேபாளம், மாலாவி, தான்சானியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் எளிமையான செயல் திட்டங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியதில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :