வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (16:01 IST)

விஜயகாந்த் நாக்கை மடித்து பேசுவது ஏன்? வி.சி.சந்திரகுமார் விளக்கம்

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து சுத்தமல்லியில் தேமுதிக மாநில கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது:–
 
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்தாலும் அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் தங்களுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்கிறார்கள். தமிழக மக்களுக்கு தொடர்ந்து அந்த இரு கட்சிகளும் துரோகம் செய்து வருகின்றன.
 
தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு திமுக விலகியது ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியினர் இந்த தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதியாகி விட்டது.
 
அதனால்தான் திமுகவினர் காங்கிரஸ் கட்சியை இந்த நாடாளுமன்ற தேர்தலில் கழற்றி விட்டு விட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வருகிறார்.
 
இதே பாணியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாயகன் ராசாவும் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்து வருகிறார். ஆனாலும் இந்த வழக்கு தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டும் ஈடுபடவில்லை. கருணாநிதியின் மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என அனைவருக்கும் பங்கு உண்டு. தமிழகத்தில் தற்போது கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதை சட்டசபையில் எங்களது தலைவர் விஜயகாந்த் கேட்டால் அவர் நாக்கை மடித்து பேசுகிறார். நாகரீகம் தெரியாதவர் என கூறுகின்றனர். உலகில் கோபடாத மனிதர் யார் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. விஜயகாந்த் நாக்கை மடித்து பேசுவது அவருடைய குணாதிசயம்.
 
சிறு வயது முதலே அவருக்கு அநீதி நடப்பதை கண்டால் கோபம் வருவது இயல்பு. தமிழக மக்களுக்கு துரோகம் செய்பவர்களை விஜயகாந்த் தட்டிக்கேட்டால் அவர் அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறார் என கூறுகின்றனர்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் கோபப்பட்டதே இல்லையா? அவர் கைநீட்டி பேசியதே இல்லையா? தனது கட்சியினரை அவர் கண்டித்ததே இல்லையா? இதேபோல விஜயகாந்த் நடந்து கொண்டால் அதை பெரிதுபடுத்தி பேசுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்.
 
பொருளாதாரத்தில் தற்போது பின்தங்கி உள்ள இந்தியாவை வல்லரசாக மாற்ற நரேந்திரமோடி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். எனவே வருகிற தேர்தலில் அவரது கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது என்று அவர் பேசினார்.