1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (13:49 IST)

ரூ.25 லட்சம் கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்

சிதம்பரத்தில் பள்ளி மாணவனை கடத்தியவர்கள் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
 
சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது 16) அங்குள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
 
நேற்று மாலை சூர்யபிரகாஷ் டியூஷனுக்கு சென்றார். இரவு சூர்யபிரகாசின் சைக்கிள் வீட்டு முன்பு நின்றது. இதனால் சூர்யபிரகாஷ் வீட்டுக்கு திரும்பிவிட்டார் என்று அவரது தந்தை கருதினார்.
 
ஆனால் சூர்யபிரகாசை வீட்டுக்குள் காணவில்லை. சூர்யபிரகாசிடம் செல்போன் இருந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசியபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
 
பின்னர் ஒருதடவை செல்போன் இணைப்பு கிடைத்தது. அதில் வேறொரு நபர் பேசினார். அவர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். ரூ. 25 லட்சம் பணம் கொடுத்தால் மகனை விடுவிப்போம் என்று கூறி போனை துண்டித்துவிட்டார். அதன்பிறகு அந்த போனில் இணைப்பு கிடைக்கவே இல்லை.
 
இது தொடர்பாக கந்தசாமி சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சூர்யபிரகாசின் செல்போன் எங்கிருந்து பேசப்பட்டுள்ளது என்பதை செல்போன் டவர் மூலம் கண்டறிந்தனர். அது கடலூர் தேவனாம் பட்டினத்தை காட்டியது. எனவே காவல்துறையினர் கடலூர் பகுதியில் தேடி வருகிறார்கள்.