வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (00:06 IST)

ராகுல் காந்தி வருகையால் திருச்சியே திணறியது மட்டுமல்ல, திக்குமுக்காடியது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்காக, திருச்சியில் கூடியது கூட்டப்பட்ட கூட்டமல்ல. அங்கே கூடியது கொள்கைக் கூட்டம் என பெருமிதம் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 113ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதி அன்று திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கடும் மழையினை பொருட்படுத்தாமல் திரண்டு வந்து இளந்தலைவர் ராகுல்காந்தியின் அற்புதமான உரையை கேட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
 
அடாது மழை பெய்தாலும் விடாது பொதுக்கூட்டம் நடக்கும் என்பதை காங்கிரஸ் தோழர்கள் உலகிற்கு உணர்த்திவிட்டனர். திருச்சியில் கூடியது கூட்டப்பட்ட கூட்டமல்ல. அங்கே கூடியது கொள்கைக் கூட்டம் என்பதை நிரூபிப்பதற்கு கடும் மழை நமக்கு உதவியிருக்கிறது.
 
காமராஜரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்கிற நோக்கத்தில் திருச்சியில் கூடிய கூட்டம் பெருமழையினால் சிதறி விடுமோ என்கிற சந்தேகம் தொடக்கத்தில் சிலருக்கு இருந்தது. ஆனால் கடும் மழையையும், காற்றையும் துச்சமென மதித்து கொஞ்சம்கூட கலையாமல் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்தியின் உரையை உற்சாகப் பெருக்கோடு கேட்டதை கண்கூடாகப் பார்த்த அவரே மெய்சிலிர்த்துப் போனார்.
 
ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத கட்சியில் இத்தகைய கொள்கைப் பிடிப்புள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் இருப்பதைப் பார்த்து ராகுல்காந்தி மகிழ்ச்சியில் திளைத்ததை அருகிலிருந்து காண முடிந்தது.
 
ராகுல்காந்தி பேசத் துவங்கியதும், காங்கிரஸ் தோழர்களிடையே இருந்து வந்த உற்சாகமான வரவேற்பை பார்த்த அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மழையில் முழுவதுமாக நனைந்து கொண்டே அவர் ஆற்றிய பேரூரையை காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
 
தமிழக காங்கிரசின் அரசியல் பயணத்திற்கு வலிமை சேர்க்கிற வகையில் ராகுல்காந்தி அவர்களின் சிறப்புரை அமைந்திருந்தது. தமிழகத்திலே நடைபெற்று வருகிற மக்கள் விரோத ஆட்சியை தோலுரித்துக் காட்டுகிற வகையில் அவரது எழுச்சியுரை இருந்ததைக் கண்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கரவொலி எழுப்பிய போது ஜி.கார்னர் மைதானமே அதிர்ந்து போனது.
 
'திருச்சியே திணறியது" என்கிற வகையில் காங்கிரஸ் தோழர்கள் அணி திரண்டு வர வேண்டும் என்று உங்களை அன்போடு வேண்டினேன். இலவச பிரியாணியோ, மதுபான வகைகளோ வழங்கி கூட்டம் சேர்க்கிற கலாச்சாரம் நம்மிடையே இல்லை. இந்நிலையில் ஆயிரக்கணக்கில் வருவீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் லட்சக்கணக்கில் குவிந்த உங்களை எப்படி பாராட்டுவது ? உங்களது வருகையினால் திருச்சியே திணறியது மட்டுமல்ல திக்குமுக்காடியது என்கிற செய்திகள் எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
 
தங்களது சொந்த முயற்சியின் காரணமாக பல்வேறு சிரமங்களை தாங்கிக் கொண்டு லட்சக்கணக்கில் திரண்டு வந்து தமிழக காங்கிரசின் வலிமையை உலகுக்கு பறைசாற்றிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது ? தொண்டர்கள் வழிநடத்துகிற இயக்கமாக தமிழக காங்கிரஸ் இனி செயல்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களுடைய எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவு செய்யப்படும். தொண்டர்களுடைய உழைப்பு வீண்போகாது. நமக்கான பொற்காலம் தொடங்கி விட்டது.
 
தமிழகத்தில் ஒரே காங்கிரஸ்தான் இருக்க முடியும் என்பதை திருச்சி கூட்டம் நிரூபித்துவிட்டது. மீண்டும் தமிழகத்தில் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிற லட்சியத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் திருச்சி கூட்டம் வழங்குகிற செய்தியாகும் என தெரிவித்துள்ளார்