வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (09:06 IST)

முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று முதல் முறை வாக்காளர்களுக்கு முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:
 
கடந்த மார்ச் 3 முதல் மொத்தம் 54 இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டேன். இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த என்னுடைய கனவுகளையும், கவலைகளையும், திட்டங்களையும் எடுத்துக்கூற வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
 
திமுக தலைவர் கருணாநிதியின் சுயநலப் போக்கைக் கண்டு வெகுண்டெழுந்து அஇஅதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவருடைய நல்லாசியுடனும், அவருடைய வழியிலும் அரசியல் பயணத்தைத் தொடங்கிய நான், என்னுடைய வாழ்வை மக்களுக்காகவே முழுமையாக அர்ப்பணித்து வாழ்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு ஏதுமில்லை.
 
மக்களுடைய வளர்ச்சிதான் எனது மகிழ்ச்சி. எனவேதான், என்னுடைய ஆட்சிக்காலம் என்பது ஏழை, எளிய மக்களுக்காகவும், சமூக நீதி காப்பதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உயர்வுக்கும் தொண்டு செய்வதாக எப்போதும் அமைகிறது.
 
விலையில்லாத அரிசி, முதியோர் ஓய்வூதியம் அதிகரிப்பு, எண்ணற்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைக் கண்டு அவற்றை பின்பற்ற ஏனைய இந்திய மாநிலங்களும், சில வெளிநாடுகளும் முயற்சிப்பதை நன்கு அறிவீர்கள்.
 
மக்கள் நலன் காக்கும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தும் ஆவல் எனது உள்ளத்தில் இருக்கிறது. அவற்றை செயல்படுத்த உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு எந்நாளும் தேவை.
 
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்த திமுக, அந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்மை செய்வதற்குப் பதிலாக, தமிழர்களுக்கு எண்ணற்ற துரோகங்களையும், தீமைகளையும்தான் செய்தது.
 
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு திமுக ஆதரவு அளித்து வந்தது. எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும், அத்தனை வாய்ப்பையும் திமுக தலைவர் கருணாநிதியும், அவரது கட்சியினரும் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது வரலாறு.
 
எனவே, வாக்காளர்கள் இந்திய நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் இளைய தலைமுறை வாக்காளர்கள், தங்கள் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
 
தமிழகம் தலைநிமிரும் வகையிலும், இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், அனைவரும் வாக்குப் பதிவு தினத்தன்று காலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.