செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (14:34 IST)

மின்வெட்டு பற்றி கேட்டால் நான் உளருகிறேனாம் - விஜயகாந்த்

மின்வெட்டு பற்றி கேட்டால் உண்மை எது என்று தெரியாமல் விஜயகாந்த் ஏதேதோ உளருகிறார் என்று கூறுகிறார்கள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் ஓமலூர், எடப்பாடி, நெத்தி மேடு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:–
 
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் தான் வெற்றி பெற போகிறார்கள். மேட்டூர் அணையின் உபரி நீரை பயனுள்ளதாக தேக்கினால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் தீர்க்க முடியும்.
 
ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் பூக்களை ஏற்றுமதி செய்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்கு காமலாபுரத்தில் செயல்படாமல் உள்ள விமான நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
 
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கு சதி திட்டம் காரணம் என்று ஜெயலலிதா கூறுகிறார். நான் கேட்கிறேன், ஆளுங் கட்சிக்கு தெரியாமல் எப்படி சதி திட்டம் நடக்கும். கடந்த 1991 – 96 மற்றும் 2001 – 06 ஆம் ஆண்டுகளில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக திட்டங்களை என்னென்ன செய்தோம் என்று ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?
 
இதைப்பற்றி கேட்டால் உண்மை எது என்று தெரியாமல் விஜயகாந்த் ஏதேதோ உளருகிறார் என்று கூறுகிறார்கள். அதிமுக – திமுக கட்சிகள் மக்களுக்கு தேவையான எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. விலை வாசி உயர்வு தான் மிச்சம்.
 
ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்று ஜெயலலிதா உறுதி அளித்தார். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் அடிக்கடி நிலவும் மின்வெட்டால் தமிழகம் இருண்ட மாநிலமாகத்தான் திகழ்கிறது. எனவே இந்த 2 கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
 
நாடு வளம்பெற நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் மோடி பிரதமராக வேண்டும். சேலம் தொகுதியில் போட்டியிடும் எனது மைத்துனர் எல்.கே.சுதீஷ் நல்லவர், வல்லவர், ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யகூடியவர். சேலத்தில் அவரை வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து தரப்பு மக்களும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் பேசினார்.
 
பிரசாரத்தில் எம்.எல்.ஏக்கள் அழகாபுரம் மோகன் ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு, மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சி கொடியுடன் திரண்டு வந்திருந்தனர்.