1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (15:48 IST)

மதவெறி, பயங்கரவாதத்தை தலைதூக்க விடக்கூடாது - மாணிக்சர்க்கார்

மதவெறியை தலைதூக்க விடக்கூடாது. பயங்கரவாதத்தை தலைதூக்க விடக்கூடாது என்று திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்கார் கூறியுள்ளார்.
 
தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் பொதுக் கூட்டம் திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சந்திரகுமார் வரவேற்றார்.
 
கூட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து திரிபுரா மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக்சர்க்கார் பேசியதாவது:-
 
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டில் மதம், சாதி, இனத்தின் பேரால் மக்களை கூறுபோடும் சக்திகள் காங்கிரஸ் ஆட்சியில் தலை விரித்தாடுகிறது. எனவே இந்த காங்கிரஸ் கட்சியை தமிழக அளவிலும், இந்திய அளவிலும் முறியடிக்க வேண்டும். நாட்டை கெடுத்த காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிக்கு மாற்றாக மதசார்பற்ற கட்சிகள் ஒன்றுபட முடியும். மாற்றத்தை கொண்டுவர முடியும். அதனால்தான் இடதுசாரிகள் ஒன்றுபட்டு மாற்றுக்கொள்கைகளை முன்வைத்துள்ளது. இந்தியாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் எடுக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
 
மதவெறியை தலைதூக்க விடக்கூடாது. பயங்கரவாதத்தை தலைதூக்க விடக்கூடாது. இதுபோன்ற மாற்றுக் கொள்கைகளை இடதுசாரி கட்சிகள் முன்வைத்துள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிக்கு அதிக வாக்குகள் இருப்பதாக சித்திரம் தீட்டி வருகிறார்கள். அவர்களுக்கு 20 சதவீத வாக்குகள் தான் உள்ளன. 50 சதவீத வாக்குகள் அவர்களுக்கு எதிராக உள்ளன. இதனால் தான் மாற்று அரசு உருவாக்க முடியும். அந்த அரசு மதசார்பற்ற அரசாக, காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிக்கு மாற்று உருவாக்க முடியும். அதனை இடதுசாரிகள் கட்சியால் தான் உருவாக்க முடியும்.
 
இந்த சூழ்நிலையில் 50 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது இடதுசாரிகளின் பலத்தை காட்டும் தேர்தல். இதன் மூலம் இடதுசாரிகளின் பலம் அதிகரிப்பதோடு, மக்களின் பாதுகாப்பை, இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க முடியும். அதற்கான ஆதரவை நீங்கள் தந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் பேசினார்.
 
கூட்டத்தில் ரெங்கராஜன் எம்.பி., இந்திய மாதர் தேசிய சம்மேளன பொதுச் செயலாளர் ஆனிராஜா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷரீப், கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், சீனிவாசன், மதசார்பற்ற ஜனதாதளம் மாநில செயலாளர் மலர்க்கொடி கருணாநிதி, மாவட்ட தலைவர் கருணாநிதி, பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பாரி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் தஞ்சை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.