1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (18:25 IST)

பெண் காவலர் கற்பழித்து கொலையா? தற்கொலையா? உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த பெண் காவலர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
 
நத்தம் அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் சிக்கந்தர். இவருடைய மகள் ஷர்மிளாபானு(வயது 22). திருமணமாகாதவர். சென்னை ஆயுதபடை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
 
இந்த நிலையில் ஷர்மிளாபானு திடீரென இறந்து விட்டதாக சென்னையில் இருந்து பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் சென்னை சென்றனர். காதல் தோல்வியால் ஷர்மிளா பானு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இதனை ஷர்மிளாபானுவின் பெற்றோர் நம்பவில்லை. தனது மகள் சாவில் மர்மம் உள்ளது. கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறினர். ஷர்மிளா பானுவின் உடல் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்று காலை ஷர்மிளாபானுவின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு அவரது சாவில் சந்தேகம் உள்ளது. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பிரேதத்துடன் நத்தம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
 
ஆயுதப்படை காவல்துறையும், நத்தம் காவல்துறையும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இங்கு அந்த பகுதியில் பதட்டம் மேலும் அதிகரித்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, ராமச்சந்திரன், ஜானகிராமன், ஆர்.டி.ஓ. உத்தமன், நத்தம் வட்டாட்சியர் நாராயணன் ஆகியோர் மீண்டும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஷர்மிளாபானுவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
அதனை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.
 
இதனிடையே ஷர்மிளாபானுவின் தந்தை சிக்கந்தர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஷர்மிளாபானுவின் உடல் பாகங்களில் காயம் உள்ளது. இதனால் பாலியல் பலாத்காரப்படுத்தி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே மகள் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
 
இதனை விசாரித்த நீதிபதி சுப்பையா, ஷர்மிளாபானுவின் உடலை மறு பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
 
இதையடுத்து ஷர்மிளா பானுவின் உடலை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு இன்று மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
 
நத்தத்தில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 300–க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.