வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

தொழில் அதிபரின் மனைவி சென்னையில் கடத்தல்; பரபரப்பு தகவல்கள்

FILE
தமிழக தொழில் அதிபரை கூலிப்படை உதவியுடன், மலேசியாவில் சிறை வைத்துள்ளதாகவும், அவரது மனைவியை சென்னைக்கு வரவழைத்து கடத்திச் சென்று விட்டதாகவும் போலீசில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). தொழில் அதிபரான இவர் மலேசியாவில் வசிக்கிறார். இவரது முதல் மனைவியை பிரிந்து விட்டார். கடந்த 2012-ம் ஆண்டு, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரோகிணிபிரியா (32) என்பவரை அவர் 2-வதாக பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. ராஜ்குமார், ரோகிணிபிரியாவுடன், மலேசியாவில் வசித்து வந்தார்.

ராஜ்குமாருக்கு தனது முதல் மனைவியின் மூலம், சூரஜ் என்ற மகன் இருக்கிறார். சூரஜ், சென்னையில் உள்ள வீட்டில் தங்கி இருந்து, கல்லூரி ஒன்றில் பி.ஏ. பட்டப்படிப்பு படிக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு சூரஜ், சென்னை அபிராமபுரம் போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது தந்தையை மலேசியாவில் ஒரு கும்பல் கடத்தி சிறை வைத்துள்ளது. எனது சித்தியை (ராஜ்குமாரின் 2-வது மனைவி) உடனே சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், கொலை செய்து விடுவோம் என்றும், எனது தந்தையை அவர்கள் மிரட்டினார்கள். இதனால், எனது சித்தி விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கியவுடன், விமான நிலையத்தில் இருந்து எனது சித்தியை கடத்திச் சென்று விட்டனர். இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. எனக்கும் கொலை மிரட்டல் வருகிறது. எனது சித்தியை தேடக்கூடாது என்று எனது தந்தையிடம், அவரை சிறை வைத்த கும்பல் மிரட்டி இருக்கிறார்கள். எனக்கும், எனது தந்தைக்கும் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. உரிய பாதுகாப்பு தர வேண்டும். எனது சித்தியை மீட்டுத்தர வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது, அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், மலேசியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த தொழில் அதிபர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார். அவரும் நேற்று சென்னை வந்தார். அவரை சிறை வைத்த கூலிப்படை கும்பல்தான், ரோகிணிப்பிரியாவையும் கடத்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரோகிணிப்பிரியாவை பத்திரமாக மீட்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.