வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

டாக்டர் சுப்பையாவை கொலை செய்த அரசு டாக்டரின் பரபரப்பு வாக்குமூலம்

FILE
சென்னையில் நடந்த டாக்டர் கொலை வழக்கில், கூலிப்படையை ஏவிய அரசு டாக்டரும், கூலிப்படையினர் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ரூ.12 கோடி சொத்துக்காக கொலை செய்ததாக, டாக்டர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை உள்பட தமிழகத்தையே உலுக்கிய வழக்கு, டாக்டர் சுப்பையா (வயது 62) கொலை செய்யப்பட்ட வழக்காகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி இந்த படுகொலை நடந்தது. டாக்டர் சுப்பையா சென்னை அரசு பொது மருத்துவ மனையில் நரம்பியல் நிபுணராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகு, சென்னை அமிராமபுரம், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் வேலை பார்த்து வந்தார்.

செப்டம்பர் மாதம் 14-ந் தேதி, மாலை 6 மணி அளவில், தான் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து காரில் ஏற முற்பட்டபோது, 3 பேர் கொண்ட மர்ம கும்பல், டாக்டர் சுப்பையாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் எதிரில் உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 3 ஆசாமிகள், டாக்டரை சுற்றி வளைக்கும் காட்சியும், அவர்களில் 2 பேர் டாக்டரை வெட்டும் காட்சியும், கேமராவில் பதிவான காட்சிகளாகும். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் பைசில், அவரது சகோதரர் என்ஜினீயர் போரீஸ் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். வக்கீல் பைசிலின் தந்தை பொன்னுசாமி, தாயார் மேரி புஷ்பம் ஆகியோர், கோவையில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டனர்.

டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டதற்கு, பின்னணி சம்பவம் ஒன்றை போலீசார் காரணமாக சொன்னார்கள். கொலை செய்யப்பட்ட டாக்டர் சுப்பையாவும், சரண் அடைந்த பொன்னுசாமியும் நெருங்கிய உறவினர்கள். பொன்னுசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.அவரது மனைவி மேரிபுஷ்பமும் ஆசிரியைதான். சுப்பையாவும், பொன்னுசாமியும், கன்னியாகுமரி அருகில் உள்ள சாமிதோப்பை சேர்ந்தவர்கள். பொன்னுசாமி தொழில் ரீதியாக, ராதாபுரம் அருகில் உள்ள காணிமடத்தில் குடியேறிவிட்டார். சுப்பையா தொழில் ரீதியாக சென்னை துரைப்பாக்கத்தில் குடியேறி விட்டார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள அஞ்சுகிராமத்தில் டாக்டர் சுப்பையாவுக்கு சொந்தமான 2.4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ரூ.12 கோடி மதிப்புடையது ஆகும். இந்த நிலத்துக்கு, பொன்னுசாமியும் சொந்தம் கொண்டாடினார். இந்த நிலத்தால், டாக்டர் சுப்பையாவும், பொன்னுசாமியும் ஜென்ம விரோதி ஆனார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு வரை வழக்கு போட்டும், நிலம் சுப்பையாவுக்கே சொந்தம் என்று தீர்ப்பாகி விட்டது. இந்த நிலத்தால் ஏற்பட்ட பகையால், டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. கூலிப்படையை ஏவி விட்டு, டாக்டர் சுப்பையாவை, பொன்னுசாமி குடும்பத்தினர் தீர்த்துக்கட்டியதும் அம்பலமானது.

டாக்டர் சுப்பையாவை வெட்டிய கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்த கொலையாளிகள் 3 பேர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் 3 பேர் யார்? என்று கண்டுபிடிக்கும் பணியில் 5 தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். மைலாப்பூர் துணை கமிஷனர் நரேந்திரன் நாயர், உதவி கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், கனகராஜ், ஜவஹர், முருகேசன் மற்றும் 50 போலீசார் கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீசார் கடந்த ஒரு மாதமாக நடத்திய தேடுதல் வேட்டையில், பலன் கிடைத்தது. டாக்டர் சுப்பையாவை கொலை செய்த கூலிப்படையினர், நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள பணகுடியைச் சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ் மற்றும் அதே பகுதியில் உள்ள திருத்தனங்குடியைச் சேர்ந்த அய்யப்பன் ஆகியோர் என்று தெரிய வந்தது.

இந்த கூலிப்படையை அமர்த்தி, கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் அரசு டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் என்றும் கண்டறியப்பட்டது. இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி செயல்பட்டவர், வக்கீல் வில்லியம்ஸ்.

டாக்டர் ஜேம்ஸ் சதீஸ்குமார் நெல்லையில் அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிகிறார். வக்கீல் வில்லியம்ஸ், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். பொன்னுசாமி குடும்பத்தினரின் சொந்த ஊரான காணிமடம்தான், இவரது ஊராகும். காணி மடத்தில், பொன்னுசாமியின் வீடும், வக்கீல் வில்லியம்சின் வீடும் எதிர், எதிரில் உள்ளது.

கூலிப்படை கும்பலைச் சேர்ந்த முருகன்,அய்யப்பன், செல்வபிரகாஷ் மற்றும் டாக்டர் ஜேம்ஸ்சதீஷ்குமார், வக்கீல் வில்லியம்ஸ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று இவர்களில் வில்லியம்சை தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரும், நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

டாக்டர் ஜேம்ஸ்சதீஷ்குமாரை தவிர முருகன்,அய்யப்பன், செல்வபிரகாஷ் ஆகிய 3 பேரின் முகத்தையும் போலீசார் மூடி இருந்தனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கொலையாளிகள் பிடிபட்டது பற்றி விளக்கி கூறினார். டாக்டர் கொலை செய்யப்பட்ட கேமரா காட்சிகளையும் வீடியோ படமாக நிருபர்களுக்கு போட்டு காண்பித்தார். கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு, கமிஷனர் ஜார்ஜ் பாராட்டு தெரிவித்தார். பேட்டியின் போது, உளவுப்பிரிவு இணை கமிஷனர் வரதராஜு உடன் இருந்தார்.

இந்த கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட அரசு டாக்டர் ஜேம்ஸ்சதீஷ்குமார், டாக்டர் சுப்பையாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவரது வாக்குமூலம் வருமாறு, எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஆகும். எனது தந்தை ஜெகநாதனும் டாக்டர் ஆவார். அவர் சொந்த ஊரில் கிளினிக் வைத்துள்ளார். எனது தாயார் பெயர் சீதாலட்சுமி. எனது தங்கை திருமணமாகி, கணவருடன் அமெரிக்காவில் வசிக்கிறார். எனக்கு திருமணமாகி விட்டது. எனது மனைவி மகேஷ்வரியும் டாக்டர்தான். நானும், எனது மனைவியும் நெல்லை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிகிறோம். ஒரு ஆண் குழந்தை எங்களுக்கு உள்ளது. பணத்தாசையால், இந்த கொலை வழக்கில் சிக்கி, எனது வாழ்க்கையையும் தொலைத்து விட்டேன்.

நான் டாக்டர் தொழில் மட்டும் செய்யவில்லை. ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்தும் சம்பாதித்து வந்தேன். அந்த வகையில், என்னிடம் வட்டிக்கு பணம் வாங்கிய ஒருவர், ரூ.42 லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார். அந்த பணத்தை வக்கீல் வில்லியம்சும், வக்கீல் பைசிலும் எனக்கு திருப்பி வாங்கி கொடுத்தார்கள்.

அதில் இருந்து அவர்கள் இருவரும் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். நாங்கள் அடிக்கடி சந்திப்போம். காணி மடத்தில் உள்ள, வக்கீல் வில்லியம்ஸ் வீட்டுக்கு போவேன். அவ்வாறு போய் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை மாதம், வில்லியம்ஸ் வீட்டில், வக்கீல் பைசில், அவரது சகோதரர் என்ஜினீயர் போரீஸ் ஆகியோர் இருந்தனர்.அப்போது தான், பிரச்சினைக்குரிய ரூ.12 கோடி மதிப்புள்ள நிலத்தை எப்படியாவது அடைய வேண்டும், அதற்கு என்ன செய்வது, என்று அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

டாக்டர் சுப்பையாவை தீர்த்துக்கட்டினால், நிலம் நமது கைக்கு வந்து விடும். சுப்பையாவை தீர்த்துக்கட்ட என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். அப்போது நான் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தேன்.

கைதேர்ந்த ரவுடிகள் மூலம் கொலை செய்தால், அவர்களை போலீசார் எளிதில் கைது செய்து விடுவார்கள். நாமும் மாட்டிக்கொள்வோம், ரவுடி தொழில் தெரியாத புதிய நபர்களை வைத்து, கொலை திட்டத்தை முடிக்கலாம் என்றும், அதற்கு என்னிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என்றும், நான் சொன்னேன்.

எனது திட்டத்துக்கு அவர்கள் சம்மதித்தார்கள். காரியம் முடிந்து சொத்து கைக்கு வந்தவுடன், பாதி சொத்தை எனக்கு கொடுக்க வேண்டும் என்றும், நான் கேட்டேன். அதற்கு அவர்களும் சம்மதித்தார்கள்.

தற்போது கைதாகியுள்ள முருகன், அய்யப்பன், செல்வபிரகாஷ் ஆகிய மூவரும் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தனர். அவர்கள் என்னிடம் எடுபிடி ஆட்களாக இருந்தனர்.அவர்கள் மூவரையும் வைத்து, டாக்டர் சுப்பையா கொலை திட்டத்தை முடிக்கலாம் என்று, நான் சொன்னேன்.அதற்கும் வக்கீல்கள் வில்லியம்ஸ், பைசில் இருவரும் சம்மதித்தனர். அதன் அடிப்படையில் கொலை திட்டம் உருவானது.

டாக்டர் சுப்பையாவின் படத்தை அடையாளத்துக்காக, பைசில் அவரது செல்போனில் இருந்து கொடுத்தார். செல்போன் படம் தெளிவாக இல்லை. செல்போன் படத்தை அஞ்சுகிராமத்தில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் முருகன் தெளிவாக பிரிண்ட் போட்டார். பின்னர் முருகன், அய்யப்பன், செல்வபிரகாஷ் மூவரும், கொலை திட்டத்தை முடிக்க பஸ் ஏறி சென்னை வந்தனர். கொலை திட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டனர்.

அவர்களுக்கு பேசிய கூலிப்பணம் கொடுக்கப்படவில்லை. அதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு சென்னை வந்தேன். சென்னை துரைப்பாக்கம், பி.டி.சி.நகரில் வக்கீல் பைசில் தனது சகோதரர் மற்றும் தந்தை, தாயாருடன் தங்கி இருந்தார். அவர்களை சந்தித்தபோது போலீசார் எங்களை பின் தொடர்ந்து வந்து பிடித்துவிட்டனர்.

இவ்வாறு டாக்டர் ஜேம்ஸ்சதீஷ்குமார், தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வக்கீல் வில்லியம்சை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.