வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 29 மார்ச் 2014 (14:12 IST)

ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரும் சோதனையிடப்படுகிறது - பிரவீ்ண்குமார்

தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பாரபட்சமின்றி அனைத்துகட்சி தலைவர்களின் வாகனங்கள் சோதனையிடப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்துக்கு செல்லும் ஹெலிகாப்டரும் சோதனையிடப்படுகிறது என்று தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
 
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதில் யார்–யார்? எந்தெந்த தொகுதிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 
தேர்தல் விதி மீறல் பற்றி புகார் செய்வது பற்றியும், பணம், மதுபாட்டில் வழங்குவது பற்றிய பல்வேறு புகார்களை வீடியோ, சி.டி., இ.மெயில் மூலம் கொடுக்கும் வசதி இதுவரை இருந்தது. இப்போது தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் புகார் அனுப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
 
அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்பட அனைத்து விவரங்களையும் போட்டோவுடன் அனுப்பலாம். அனுப்புபவர் பெயர், முகவரியை வேண்டுமானால் தெரிவிக்கலாம். தேவையில்லாத புகார்களை அனுப்ப வேண்டாம்.
 
டி.வி. சேனல்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் செய்வது கண்காணிக்கப்படுகிறது. வாகன சோதனையில் தற்போது வியாபாரிகள் பாதிப்பு அடைவது இல்லை. இந்த புகார்களும் குறைந்து விட்டன.

தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பாரபட்சமின்றி அனைத்துகட்சி தலைவர்களின் வாகனங்கள் சோதனையிடப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்துக்கு செல்லும் ஹெலிகாப்டரும் சோதனையிடப்படுகிறது.
 
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் சோதனையிடுவார்கள். பொதுவாக ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தில்தான் சோதனை நடைபெறுகிறது. 24 மணி நேரத்துக்கு முன்பே ஹெலிகாப்டர் வந்து இறங்கும் தகவல் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கட்சியின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
 
அதன்மூலம் அவர்கள் சென்று சோதனை நடத்துகிறார்கள். ஏற்காடு இடைத்தேர்தலின் போது கூட முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டு இருக்கிறார்கள்.
 
அதேபோல் இப்போதும் பாரபட்சமின்றி சோதனையிடுகிறோம். ஆனால் அடிக்கடி சோதனையிட தேவையில்லை.
 
பெங்களூரில் நடைபெறும் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வழக்கு பற்றி தேர்தல் பிரசாரத்தில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருக்கிறோம்.
 
தமிழ்நாட்டில் கூடை சின்னமும், முரசு சின்னமும் ஒன்றுபோல் இருப்பதால் சுயேச்சைகளுக்கு கூடை சின்னம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை வாகன சோதனையில் ரூ.13 கோடியே 16 லட்சம் ரொக்கமும் ரூ.6.5 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களும் பிடிபட்டுள்ளது.
 
கர்நாடக தேர்தல் முடிந்த பின்பு தமிழ்நாட்டிற்கு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் வருவார்கள்.
 
சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
கோவில், மசூதி, தேவாலயத்தின் உள்ளே தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்பது விதி. அதை மீறினால் வழக்கு தொடரப்படும்.
 
சேலத்தில் நேற்று மசூதி முன்பு இரு கட்சியினர் தகராறில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.