1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 21 ஏப்ரல் 2014 (14:10 IST)

சொகுசு வாழ்க்கைக்காக மூதாட்டி சகோதரிகளை கொலை செய்த பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சகோதரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியுள்ளது. வீட்டு வேலை கேட்டு சென்ற பெண் கணவனுடன் சேர்ந்து பணம், நகைக்காக  கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை  தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயா (எ) ஜெயலட்சுமி (70). இவரது தங்கை காமாட்சி (65). இருவரும் வாடகை வீட்டில் வசித்தனர். ஜெயாவுக்கு திருமணம் ஆகவில்லை. காமாட்சிக்கு திருமணம் ஆகி விட்டது. குழந்தை  இல்லை. இவர், 10 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று விட்டார். மத்திய அரசு நிறுவனமான கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பேராசிரியராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயாவை காமாட்சிதான் உடனிருந்து கவனித்தார்.
 
இந்நிலையில், கடந்த 2011 மே 11 அன்று மதியம் சகோதரிகள் இருவரும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். அவர்களை யாரோ  கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை  பிடிக்க குமரன் நகர் காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்தனர். தீவிர  விசாரணை நடத்தியும் பலன் இல்லை. 
 
முதல்கட்டமாக, சகோதரிகளின் வீட்டுக்கு வந்து செல்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
 
வங்கி அதிகாரி ஒருவர் அடிக்கடி ஜெயா வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்தியும் பலனில்லை. தொடர்ந்து  அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர், துணி அயன் செய்பவர், கூலி வேலை செய்பவர்கள் என 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை  நடத்தியும் எந்தவித துப்பும் துலங்கவில்லை.
 
இந்த பரபரப்பான நிலையில், மூதாட்டி சகோதரிகளின் வீட்டில் வேலை கேட்டு சென்ற பெருங்குடி அறிஞர் அண்ணா நகர் விஜயா என்ற விஜயலட்சுமி (40), அவரது கணவன் ஆட்டோ டிரைவர் மகேந்திரன் (53), தரமணி வினோத் குமார் (19), தி.நகர் சந்தோஷ் என்ற சந்தோஷ்  குமார் (21), அதே பகுதியை சேர்ந்த முத்து (19), ஹரி என்ற ஹரி  கிருஷ்ணன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் கைது  செய்யப்பட்டனர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அனைவரும் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை கண்டுபிடித்த துணை ஆணையர் கண்ணன், உதவி ஆணையர் அசோக் குமார், ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோரை ஆணையர் திரிபாதி பாராட்டினார்.
 
கொலை செய்தது ஏன் என்று விஜயா காவல்துறையினரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: கணவர் ஆட்டோ ஓட்டி வந்தார். அதில், போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால், நானும் ஏதாவது வேலை செய்து குடும்பம் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தேன். வீட்டு வேலை செய்ய முடிவு செய்தேன். இதை தொடர்ந்து எங்கள் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு வேலை கேட்டு சென்றேன். யாரும் எனக்கு வேலை கொடுக்கவில்லை. இருந்தாலும் மனம் தளரவில்லை. மூதாட்டி சகோதரிகள் வீட்டிற்கும் சென்று வேலை கேட்டேன். அவர்கள் யோசித்து சொல்வதாக கூறி அனுப்பினர். அவர்களின் செல்வ  செழிப்பான நிலை என் கண்ணை உறுத்தியது. மேலும், அவர்கள் தனிமையில் இருப்பதையும் கவனித்தேன். இதுகுறித்து எனது  கணவரிடம் தெரிவித்தேன்.
 
யாரும் வேலை தராத நிலையில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தோம். கொலை செய்வது வரை துணிந்து விட்டோம். சம்பவத்தன்று நான் மீண்டும் வீட்டு வேலை கேட்டு போவதுபோல் மூதாட்டி சகோதரிகள் வீட்டிற்கு சென்றேன். அப்போது, வீட்டு வேலைக்கு ஆட்கள் வேண்டாம் என்று கூறினர். உடனே, அவர்களில் ஒருவரை முட்டி தள்ளினேன். தொடர்ந்து வெளியே நின்ற எனது கணவருக்கு சிக்னல் கொடுத்தேன். 
 
அவர் மேலும் 5 பேருடன் உள்ளே வந்தார். 7 பேரும் சேர்ந்து 2 பேரின் கழுத்தையும் துப்பட்டாவால் நெரித்து கொலை செய்தோம். பின்னர், உள்ளே இருந்த நகை, பணத்தை அள்ளிக் கொண்டு வெளியே வந்து ஒன்றும் தெரியாதவர்கள் போல் எங்கள் பகுதியிலேயே பதற்றம் இன்றி இருந்தோம். காவல்துறையினர் பல கோணத்தில் விசாரணை நடத்தியும் எந்த பலனும் இல்லை. 
 
3 ஆண்டுகள் ஆகிவிட்டதால் காவல்துறையினர் எங்களை கைது செய்ய மாட்டார்கள் என்று எண்ணி சுதந்திரமாக சுற்றி திரிந்தோம். ஆனால், காவல்துறையினர் மோப்பம் பிடித்து எங்களை கண்டுபிடித்து விட்டனர் என்று விஜயா கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், கொலை  செய்தது எப்படி என்று அனைவரும் நடித்து காட்டினர்.