1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

சூரியனின் செயல்பாட்டை ஆராய 'ஆதித்யா' செயற்கைகோள் - மயில்சாமி அண்ணாதுரை

சூரியனின் செயல்பாட்டை ஆராய 'ஆதித்யா' செயற்கைகோள் 2017-18 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
FILE

சேலத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பெங்களூர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்திட்ட இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:-

சந்திரன், செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து தற்போது சூரியனையும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. விண்வெளியில் நான் செய்த சின்ன சின்ன சாதனைகள் தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தி காட்டுகிறது என்றால் அது மிகையாகாது.

இன்றைய கால கட்டத்தில் சந்தர்ப்பம் என்பது மிக மிக குறைவு. வாழ்க்கையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நேர்திசையுடனும், வேகத்துடனும் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். சந்தர்ப்பங்கள் கிடைப்பதைவிட கிடைத்த சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

1982-ல் பெங்களூரில் சாதாரண விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இருந்தது. அதன்பிறகு நாளடைவில் நாசா, ஈசா என உலகத்தரத்திற்கு இணையாக தற்போது அங்கு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விரைவில் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சந்திரயான் விண்கலத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தற்போது சந்திரயான்-2 திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ள மங்கல்யான் விண்கலம் சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுபாதையை சென்றடையும்.
FILE

சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சியை அடுத்து சூரியனின் செயல்பாட்டை ஆராய்ச்சி செய்ய 'ஆதித்யா' செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் சூரியனின் இயக்கத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடியும். 'ஆதித்யா' செயற்கை கோள், 2017-18 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும். அதற்கான பணியை மேற்கொண்டுள்ளோம். அறிவியல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. மற்ற நாடுகளுக்கு இணையாக நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.