1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 7 மே 2014 (12:30 IST)

கேமராவில் பதிவான நபருக்கும் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இல்லை - சிபிசிஐடி ஐ.ஜி. மகேஸ்குமார்

சென்ட்ரல் ரயில் நிலைய கேமராவில் பதிவான நபர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கும் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சிபிசிஐடி ஐ.ஜி. மகேஸ்குமார் கூறினார்.
 
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1 ஆம் தேதி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
குண்டு வைத்த தீவிர வாதிகளை பிடிப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது குண்டு வெடிப்பதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் வழுக்கை தலை ஆசாமி ஒருவர் வேகமாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சி ஒன்றும் பதிவாகி இருந்தது.
 
இவர் மீது சந்தேகம் இருப்பதாக ஐ.ஜி.மகேஸ்குமார் அகர்வால் கூறினார். இதனால் அவர்தான் குண்டு வைத்த தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எங்கிருந்து வருகிறார்? என்பது போன்ற எந்த விவரங்களும் தெரியாமல் மர்மமாகவே இருந்தது.
 
வழுக்கை தலை ஆசாமி யார்? என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரம் காட்டினர். இப்போது அவரைப் பற்றிய மர்மம் விலகியது. சந்தேக நபர் கேரளாவை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடை சுற்றுலாவுக்காக இலங்கைக்கு அவர் செல்வதும் தெரிய வந்துள்ளது.
 
சென்னையில் இருந்த விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்த அவர் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால், விமானத்தை பிடிப்பதற்காக அவசரம் அவசரமாக ஒடியதும் தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பாக சிபிசிஐடி ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் கூறும் போது, கேமராவில் சிக்கிய சந்தேக நபர் யார் என்பதை உறுதி செய்துவிட்டோம். கேரளாவை சேர்ந்த அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்களை வெளியிட விரும்பவில்லை. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றார்.