1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (12:46 IST)

காவிரி நீர் பிரச்சனையில் துரோகம் செய்தது யார்? நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால்

காவிரி நீர் பிரச்சனையில் துரோகம் செய்தது யார்? நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று கருணாநிதிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சவால் விடுத்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று, ஆரணி தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
 
அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து, வடதண்டலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:- 
 
கடந்த ஆண்டு 2013-ல் ஜூலை மாதம் முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை மின்வெட்டு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவியது. இதனை, நான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் போது பெருமையாக கூறினேன். இவ்வாறு நான் சொன்னவுடன், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்படாத புதிய கூட்டு மின் திட்டங்கள் உட்பட மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு சொல்லி வைத்தாற் போல் திடீர் என ஒரே சமயத்தில் குறைந்தது.
 
இதன் காரணமாக, மீண்டும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இது ஏதோ சதிச்செயல், வேண்டுமென்றே மின் உற்பத்தி நிலையங்களை பழுதடைய செய்து இருக்கிறார்கள் என்று நான் தெரிவித்தேன். அதுபற்றி பாரத பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். அதை ஏற்றுக்கொள்வதை போலவே பாரதப்பிரதமரும் இது யதேச்சையாக நடந்தது என்று தெரிவித்து கடிதம் எழுதினார்.
 
அப்போது, ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது. மின்வெட்டு இல்லாத சூழ்நிலை மீண்டும் நிலவியது.

அதன் பின்னர், மக்களவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள இந்த காலகட்டத்தில் தற்போது மீண்டும் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தின் புதிய அலகு, மீண்டும் ஹைட்ரஜன் வாயு கசிவின் காரணமாக 6.3.2014 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையத்தின் புதிய அலகு 5.4.2014 முதல் பழுதடைந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த 370 மெகாவாட் மின்சார உற்பத்தி பழுதின் காரணமாக தடைபட்டு, தற்போது மீண்டும் சரி செய்யப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது.
 
தற்போது, மொத்தத்தில் 1,200 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. தேர்தல் சமயத்தில் இதுபோன்று மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதும், அதிமுக அரசின் மீது எந்தக் குறையையும் சுட்டிக்காட்ட முடியாத சூழ்நிலையில் இந்த மின்வெட்டுப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருவதும், இதேபோன்ற பிரச்சனை தேர்தல் காலங்களில் ஏற்படுவதும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மீது மக்கள் மனதில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த புதிய மின் அலகுகள் பழுது அடைந்ததில் ஏதாவது சதி செயல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மேட்டூர் மின் அலகில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரி செய்ய சீனாவில் இருந்து வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மின் நிலையம் மீண்டும் துவங்கும் போது மின் வெட்டு வெகுவாக குறைக் கப்பட்டுவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இது மட்டுமல்லாமல் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, 3,300 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டங்களுக்கு சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பெறப்பட்டுள்ளன. இதில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க மிக உய்ய அனல்மின் திட்டத்திற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை வெகு விரைவில் இறுதி செய்யப்படும். 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்திற்கான தொடக்க ஆய்வு பணிகள் முடிவு பெற்றுள்ளன. விரைவில் முதற்கட்டத்திற் கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் எடுத்துக் கொள்ளப்படும்.

மின்சார பிரச்சனையில் மக்களுக்கு துன்பங்களை விளைவித்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் நீங்கள் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது மின் உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காதவர் கருணாநிதி. எனது முந்தைய ஆட்சிக்காலத்தில் பைகாரா புனல் மின்திட்டத்திற்கு மத்திய அரசு மூலம் தடை போட்டவர் கருணாநிதி. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர் கருணாநிதி. காவிரி நதிநீர் பிரச்சனையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர் கருணாநிதி.
 
இப்படி தமிழகத்திற்கு துரோகத்தை மட்டுமே இழைத்த கருணாநிதி, அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவிரி பிரச்சனை குறித்து வாதம் செய்ய சட்டமன்றத்திலே நேரம் ஒதுக்கலாம். ஒதுக்கி, அதிலே விவாதித்து யார் தவறு செய்தார்கள்? யார் நியாயமாக நடந்து கொண்டார்கள்? யார் நம்முடைய உரிமைகளை பெற்றுத்தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் என்று கூறி இருக்கிறார்.
 
காவிரி நதிநீர் பிரச்சனையில் பல துரோகங்களை செய்து இருக்கிறார் கருணாநிதி. கர்நாடகம் அணைகளை கட்டிக்கொள்ள அனுமதித்தது, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தன்னிச்சையாக வாபஸ் வாங்கியது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
கருணாநிதியின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தல் முடிந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டப்பட்ட உடன், காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். கருணாநிதியின் துரோகங்களை பட்டியலிட நான் தயாராக இருக்கிறேன். என் கட்சியின் சார்பில் நான் தான் பேசுவேன். இதேபோல் கருணாநிதியும் வந்து சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளத்தயாரா?.
 
திமுகவின் சார்பில் துரைமுருகனோ அல்லது வேறு பிரதிநிதிகளோ விவாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கருணாநிதி ஏற்றுக்கொள்ள தயாரா? சட்டமன்றத்திற்கு வரத் தயாரா?. என்னை நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்க தயாரா? இதனை கருணாநிதி ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா? என்பது குறித்த அவருடைய முடிவை அவர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் துரோகங்கள் இழைக்கப்பட்டது உண்மை தான் என்று கருணாநிதியே ஒப்புக்கொள்கிறார் என்று தான் அர்த்தம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக பாஜகவின் ‘பி’ டீம் என்றும், பாஜகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் யாருக்கும் ‘பி’ டீம் இல்லை என்பதையும், எங்கள் அணி தான் முதன்மையான அணி என்பதையும் நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்.
 
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சி மத்தியிலே அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம் ஆகும். இதை நான் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக கழகத்தின் பொதுக் குழுவிலேயே அறிவித்தேன். இந்த லட்சியம் நிறைவேற வேண்டுமென்றால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றே தீரவேண்டும். எனவே தான், இந்த தேர்தலில் அதிமுக 40 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை தான் உள்ளது. அதுதான் அதிமுகவின் லட்சியம். மத்தியிலே காங்கிரஸ் அல்லாத ஆட்சி; பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் அதிமுகவின் லட்சியம்.
 
இதுபோன்ற ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென்றால், 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். அது போன்றதொரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதை உங்களால் தான் சாதிக்க முடியும். அப்பொழுது தான், தமிழ்நாட்டின் குரல் மத்தியில் ஓங்கி ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழினம் பாதுகாக்கப்படும். சிறுபான்மையினர் நலன்கள் உறுதி செய்யப்படும். எனவே, வருகின்ற பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் உங்களுடைய வாக்குகளை அதிமுக விற்கு சிந்தாமல், சிதறாமல் நீங்கள் அளிக்க வேண்டும்.
 
தமிழர்கள் நலன்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆகியவற்றின் வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
அதிமுக மகத்தான வெற்றி பெறும்போது என்னென்ன செயல் திட்டங்களை செயல்படுத்துவோம் என்பதை தான் நான் விளக்கமாக எடுத்துரைத்து வருகிறேன். திமுக மற்றும் இதரக் கட்சிகள் தாங்கள் என்ன செய்துள்ளோம், இனி என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துச் சொல்வதில்லை. 
 
அவர்கள் சொல்வது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று, ஜெயலலிதா பாரத பிரதமர் ஆகிவிடக்கூடாது. மற்றொன்று, தாங்கள் சுட்டிக்காட்டுபவர் தான் பாரத பிரதமர் ஆக வேண்டும்.
 
பாஜகவை பொறுத்த வரை அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்தோ, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்தோ, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தோ, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தோ, கச்சத்தீவு பிரச்சனை குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழகத்தின் முக்கியமான பிரச்சனைகளில் பாஜக.வுக்கு அக்கறை இல்லை என்று தான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
 
1996 ஆம் ஆண்டு முதல் மத்தியிலே கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் மத்தியில் ஆட்சி புரிந்துள்ளன. ஆனால், தற்போதைய பாராளுமன்ற தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தல் முடிவுகளை அளிக்கக்கூடியது.
 
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.