வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (19:55 IST)

உயிரை பணயம் வைத்தாவது மத வெறியை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்போம் - ஜி.ராமகிருஷ்ணன்

உயிரை பணயம் வைத்தாவது மத வெறியை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்போம், மதவெறிக்கு இடம் தர மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
 
தென்காசி மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொ.லிங்கத்தை ஆதரித்து செவ்வாய்கிழமை பேருந்து நிலையம் முன்பு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:
 
பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டு பழமையான பாபர் மசூதியை இடித்துவிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பின்னரும் கோயில் கட்டப்போவதாக அறிவித்துள்ளார்கள். 1992-ல் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை ரத்தக் களறியாக மாறி, மத மோதலாக வெடித்ததது. யாத்திரை சென்ற இடமெல்லாம் கலவரம். மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி. முதல்வர் ஜோதிபாசு அந்த மாநிலத்திற்குள் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தினார். தற்போது மீண்டும் தேர்தல் அறிக்கையில் அயோத்தியை குறிப்பிட்டுள்ளது மத வெறியை உருவாக்கும் செயல்.
 
வெளி நாடுகளில் பல கோடி இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், இந்துக்கள் என எல்லா மதத்தினரும் உள்ளார்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் வெளி நாடுகளில் உள்ள இந்துக்கள் பாதிக்கப்படும் போது உதவி செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நரேந்திர மோடி, அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து இவர்கள் தேர்தல் அறிக்கையில் இல்லை. சமமான வாய்ப்பு அளிப்பதாக கூறியுள்ளார்கள். 11 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைத் தூக்கிவிட இட ஒதுக்கீடு குறித்து தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவிக்க வேண்டாமா?
 
சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் வைகோ எப்படி இட ஒதுக்கீடு விஷயத்தில் பாஜகவுடன் உடன்பாடு வைக்க முடியும்? மத வெறியுள்ள பாஜகவுடன் மதிமுக உடன்பாடு வைத்துள்ளது. நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் உறுப்பினர். அவர்களின் வழிகாட்டுதலின்படி, முடிவின்படிதான் செயல்படுவேன் என்கிறார்.1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் என்ற பிரிவினை ஏற்பட்டபோது, மத மோதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டது. மோதல் ஏற்பட்ட இடங்களுக்கெல்லாம் மகாத்மா காந்தி சென்று மோதலை தடுத்து அமைதியை ஏற்படுத்தினார்.
 
மேற்கு வங்காளத்தில் காந்திஜி மத மோதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அப்போது அங்கு கவர்னராக இருந்த ராஜாஜி, காந்திஜியிடம் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அமைதி திரும்பாது என்றார். இதனையடுத்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். கலவரம் அடங்கியது. ராணுவத்தால் செய்ய முடியாததை, காந்திஜி செய்தார் என்றார் ராஜாஜி. இனியும் காந்தியை உயிருடன் விட்டு வைக்கக் கூடாது என்று கருதிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கோட்ஸே, காந்திஜியை சுட்டுக் கொன்றார். இந்த ஆர்.எஸ்.எஸ். பின்னனியில் உள்ள மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் மொழிந்துள்ளார்கள். இதனை வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் ஏற்றுக்கொள்கிறார்களா?
 
வைரத் தொழிலுக்கு புகழ் பெற்றது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத். இங்கு சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தார்கள். 2009-ம் ஆண்டு நரேந்திர மோடி அங்கு முதல்வராக இருந்தபோது, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். குஜராத்தில் 2002-ல் நடைபெற்ற கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா? குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 32 போலீஸ் அதிகாரிகள் மும்பை சிறையில் 6 ஆண்டுகளாக உள்ளார்கள். 22 இஸ்லாமியர்களை என்கவுன்டர் செய்ததாக இவர்கள் மீது வழக்கு. போலி என்கவுண்டருக்கு உத்தரவிட்ட நரேந்திர மோடி மீது வழக்குப் போட வேண்டாமா?
 
குஜராத் மாநிலத்தை போல நாட்டை முன்னோடி தேசமாக கொண்டு வருவோம் என்று நரேந்திரமோடி கூறுவது இதற்குத்தானா? குஜராத் மாநிலம், வளர்ச்சிக்கும்  முன்மாதிரி இல்லை, சமூக வளர்ச்சிக்கும் முன் உதாரணம் இல்லை.தமிழகத்தை, இதுபோன்ற குஜராத்தாக தமிழ்நாட்டை மாற்ற வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் விரும்புகிறார்களா? உயிரை பணயம் வைத்தாவது, கம்யூனிஸ்ட்டுகள் மதவெறிக்கு இடம் தர மாட்டோம்.மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சுமார் 10 ஆண்டுகள் கருணாநிதியின் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. கடைசி 6 மாதம் வெளியே வந்தார். காங்கிரஸ் மன்னிப்புக் கேட்டால் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக கருணாநிதி கூறுகிறார். காங்கிரஸ் கட்சியின் அனைத்து மக்கள் விரோத செயல்களையும் கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா? என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
 
கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டி மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.