வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (18:27 IST)

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? - மு.க.ஸ்டாலின்

2011 தேர்தலில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன உறுதிமொழிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசியதாவது:–
 
மத்தியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்ததா எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டம், கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு, மிகப் பிரம்மாண்டமான போக்குவரத்து மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள்.
 
1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச தர அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு. பொடா சட்டம் ரத்து போன்ற எத்தனையோ சாதனைகளை கூறலாம்.
 
வரலாற்று சிறப்புமிக்க சிவன் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலை தொல்பொருள் ஆய்வுத்துறை கையகப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியை தடுத்து நிறுத்தியவர் கலைஞர்.
 
இதே திருவண்ணாமலை மாவட்டத்தில் தலைவர் கலைஞர் 2009 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது ஒரு உறுதிமொழியை தந்தார். திருவண்ணாமலை கோவிலை தொல்பொருள் எடுக்காது என்ற உறுதி மொழியை தந்தார் அது நிறைவேற்றப்பட்டது. அதே போல் 51 கிராம மக்களின் கோரிக்கையான இரும்புத் தாது மணலை வெட்டி எடுக்கக் கூடாது என்பது தான்.

நான் இங்கே திமுகவின் சார்பில் உங்களிடம் ஒரு உறுதிமொழியை தருகிறேன். அது என்னவென்றால் மத்தியில் நாம் கைக்காட்டும் ஒரு ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக அந்த தனியார் நிறுவனத்தை தடுத்து நிறுத்துவோம்
 
விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி - 7 ஆயிரம் கோடி ரூபாய். பயனடைந்த விவசாயிகள் - 22 லட்சத்து 40 ஆயிரத்து 739.
 
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு பிறகு அதிக விவசாயிகள் இருப்பது திருவண்ணாமலை மாவட்டம்.
 
இங்கு சுமார் 3.5 லட்சம் கரும்பு விவசாயிகள் உள்ளனர். கடந்த திமுக ஆட்சியின்போது கரும்பு விலை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது, அவர்களை அழைத்து பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இப்போதும் 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்,
 
ஆனால் அவர்களை அழைத்து பேசாமல் அரசே தன்னிச்சையாக டன் ஒன்றுக்கு 2550 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. ஆனால் கொடுப்பது 2250 ரூபாய் மட்டுமே. தொடர் கோரிக்கை வைத்து வரும் விவசாயிகளை இந்த 3 ஆண்டு காலத்தில் ஒரு முறையாவது அழைத்து பேசினாரா? முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினாரா?
 
தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு நலிந்த கரும்பு ஆலைகள் எத்தனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விவரத்தை ஜெயலலிதா வெளியிடத் தயாரா?
 
2011 தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிகள், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன உறுதிமொழிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
திருக்கோவில்களுக்கு திமுக ஆட்சியில் தான் அதிகமான பணிகள் நடந்துள்ளன. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தங்கத்தேர் உள்பட 24 தங்கத் தேர்கள் மட்டுமே இருந்தன.
 
கழக ஆட்சியில் 21 திருக்கோயில்களில் புதிதாக தங்கத் தேர்த் திருப்பணி நிறைவடைந்து தங்கத் தேர் உலா நடைபெற்றது. மேலும் 13 திருக்கோயில்களில் புதிதாகத் தங்கத்தேர் செய்யும் திருப்பணியும் நடை பெற்றது.
 
மின்தடை திமுக ஆட்சியில் 2 மணி நேரம் மட்டுமே இருந்தது. மின் தட்டுப்பாட்டை தலைவர் கலைஞர் எப்படிச் சமாளித்தார் என்பது தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காது என ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று மின்வெட்டு எப்படி இருக்கிறது?
 
திமுக ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து எண்ணற்ற திட்டங்களை நாட்டு மக்களுக்காக நிறைவேற்றியுள்ளோம் என்ற உரிமையில் நாங்கள் உங்களை தேடி, ஆதரவை நாடி வந்திருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.