1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (21:38 IST)

யுவராஜ்: குற்றவாளியா ? போராளியா ? காவல்துறைக்கு திருமாவளவன் கேள்வி

ஒரு கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஒரு போராளியைப் போல் சரணடைய வைத்துள்ள தமிழக காவல்துறையினர் செயல் கண்டிக்கதக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தலித் மாணவன் கோகுல்ராஜ் படுகொலை வழக்கையும்,  திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கையும் சி.பி.சி.ஐ.டி விசாரணையிலிருந்து மாற்றி, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு முன்வர வேண்டும்.
 
தலித் மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியை காவல்துறை கைது செய்யமுன்வரவில்லை. மாறாக, சரணடைதல் என்னும் பெயரில் ஒரு கொலை குற்றவாளியையும், கொலை குற்றவாளியின் ஆதரவாளர்களையும் சட்ட விரோதமாக கூடுவதற்கு அனுமதித்து வேடிக்கைப் பார்க்கும் அவலத்தை தமிழக காவல்துறை அரங்கேற்றியுள்ளது.
 
குறிப்பாக, இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், கொலையாளியின் இந்த அருவறுப்பான அற்பச் செயல்களுக்கு இடமளித்துள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி. இது பாதிக்கப்பட்டோருக்கு பெரும் வேதனையளிக்கும் செயலாகும். காவல்துறையின் இந்த செயல் அவர்கள் மீதான நம்பிக்கையை முற்றிலும் தகர்த்தெறிந்துள்ளது.
 
ஒரு கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஒரு போராளியைப் போல் சரணடைய வைத்து வேடிக்கைப்பார்க்கும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்வார்கள் என நம்ப முடியவில்லை.
 
எனவே, தலித் மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கையும், திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கையும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.