1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (12:37 IST)

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம்: யுவராஜ் நாளை போலீஸில் சரணடைய முடிவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம்: யுவராஜ் நாளை போலீஸில் சரணடைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


 

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் என்பவர் காதல் விவகாரத்தில், திருச்செங்கோடு அருகே மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் மரணம் அடைந்தார். இதை முதலில் தற்கொலை என கூறிய போலீசார் பின்பு,  பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டம் எதிராலியாக விசாரணை கோணத்தை மாறிஅமைத்தது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில், திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரத வண்ணம் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையையும், கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் யுவராஜை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆனால், போலீசாருக்கு டிமிக்கு கொடுத்துவிட்டு, சந்தன கட்டை வீரப்பன் ஸ்டைலில் அவ்வப்போது வாட்ஸ் அப், டிவி பேட்டி என பரபரப்பு கிளப்பி வருகிறார். இதனால் போலீசார் யுவராஜ் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நாளை(ஞாயிறு) காலை 10.30 மணிக்கு நாமக்கல் சிபிசிஐடி போலீஸில் நாளை சரண் அடையப்போவதாக யுவராஜ் அறிவித்துள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், நான்  நீதிமன்றத்தில் சரணடையப் போவதில்லை. நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி.அன்பு, எஸ்.பி.நாகஜோதி முன் சரண் அடைய உள்ளேன் என்று கூறியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை சரியான வழியில் செல்வதால் சரணடையும் முடிவு செய்திருப்பதாகவும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.