பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் கழுத்தை அறுத்துக் கொலை


Murugan| Last Updated: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (13:49 IST)
சென்னை பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில், காதல் பிரச்சனையில் இளம் பெண் ஒருவர் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
காதல் விவகாரம் தொடர்பாக இளம் பெண்கள் கொலை செய்யப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. சென்னை நெடுங்குன்றத்தில் வசிக்கும் பெண் சோனியா(23). இவர் தாம்பரத்தில் உள்ள சூப்பர் மார்கெட்டில் பணியாற்றி வருகிறார்.
 
இவர் நேர்று இரவு வீடு திரும்புவதற்காக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த பிரசாத்(24) என்பவர் தனது மோட்டர் சைக்கிளில் அங்கு வந்து அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால், சோனியா அதை தவிர்த்துள்ளார். தன்னுடைய பைக்கில் ஏறுமாறு பிரசாத் அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் சோனியா ஏறவில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
அதில் கோபம் அடைந்த பிரசாத், தன்னிடம் இருந்த கத்தியால், சோனியாவின் கழுத்தில் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். அங்கிருந்தவர்கள் பிரசாத்தை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். 
 
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சோனியாவை மீட்டு அங்கிருந்தவர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
 
இதற்கிடையில், சோனியாவை கொலை செய்த பிரசாத், அருகிலிருந்த பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரும், சோனியாவும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். வழக்கமாக சோனியாவை பிரசாத் தனது மோட்டார் சைக்கிளில்தான் அழைத்து செல்வாராம். ஆனால், பிரசாத்தின் நடவடிக்கை பிடிக்காததால் சோனியா அவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். மேலும், வேறு ஒருவருடன் பேசி வந்ததாகவும் தெரிகிறது.
 
எனவே நேற்று அவரை பின் தொடர்ந்து வந்த பிரசாத், தன்னை காதலிக்கும் படியும், தன்னுடைய பைக்கில் ஏறுமாறும் சோனியாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால், சோனியா மறுக்கவே தன்னிடம் இருந்த கத்தியால் அவரை குத்தி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
சுவாதி படுகொலை போல், சோனியாவும் கொலை செய்யப்பட்ட விவகாரம்,  அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :