வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (16:42 IST)

5 மகளிர் தொழிற் பூங்காக்களில் உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையம்

மகளிர் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளைப் போட்டித் திறனுடன் மேற்கொள்ள, 5 மகளிர் தொழிற் பூங்காக்களில் 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2014 ஜூலை 24 அன்று அறிவித்தார். விதி 110இன் கீழ், அவரது அறிவிப்பு வருமாறு:
 
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலமாக திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில்; காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம்; சேலம் மாவட்டம் கருப்பூர்; திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை; மற்றும் மதுரை மாவட்டம் கப்பலூர் ஆகிய 5 இடங்களில் எனது ஆணைப்படி மகளிருக்கெனத் தனியாக தொழிற் பூங்காக்கள் 358.44 ஏக்கர் பரப்பளவில் 1198 தொழில் மனைகளுடன் உருவாக்கப்பட்டு; 2001ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. 
 
இத்தொழிலகங்களில் 9,100 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேற்கண்ட தொழிற் பூங்காக்களில், மகளிர் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளை போட்டித் திறனுடன் மேற்கொள்ள, தொழில்நுட்பம்; தொழில் திறன்; விற்பனை உதவி ஆகியவைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, இந்த 5 மகளிர் தொழிற் பூங்காக்களில் உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
 
இந்நேர்த்திமிகு மையத்தில் பொதுக் காட்சியகம்; மற்றும் விற்பனை மையம்; பொது வியாபார மையம்; பொது கூட்ட அரங்கம்; பொது பயிற்சிக் கூடம்; நிர்வாக அலுவலகம்; வங்கி; குழந்தைகள் காப்பகம்; மற்றும் மருத்துவ மையம் போன்றவை அமையப் பெறும். ஒவ்வொரு மையமும் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம் 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் இவை அமைக்கப்படும். எனது தலைமையிலான அரசு இத்தொகையை மானியமாக வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
கிண்டி மையத்துக்குக் கூடுதல் கட்டடம்
 
சென்னை கிண்டியிலுள்ள அரசு தொழில்நுட்ப பயிற்சி மையம், தொழிற்சாலைகளுக்கு தொழில் அறிவு மிக்க மனித ஆற்றலை உருவாக்கித் தரும் நோக்கத்துடன் கருவி மற்றும் அச்சு, அதாவது Tool and Die; குளிர்சாதனம் மற்றும் குளிர்பதனியல் கலையில் மூன்றாண்டு பட்டயப் படிப்பினை புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஒப்புதலுடன் நடத்தி வருகிறது. தற்போதுள்ள கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் ஒப்புதல் விதிகளுக்கு உரியதாக இல்லை. எனவே, 30,000 சதுர அடி பரப்பளவில் கூடுதல் கட்டடம் ஒன்று 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.