1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (02:52 IST)

காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண்

தனது புகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் அருகே உள்ள ராணிப்பேட்டை அடுத்த, அம்மூரைச் சேர்ந்தவர் சாந்தி என்பவரது மகள் சாவித்திரி(24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் வாசுவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
 
அப்போது முதலே, வரதட்சணை கேட்டு சாவித்திரியை அவரது கணவர் வாசு  கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சாவித்திரி, தனது தாய் வீட்டில் வந்து தங்கியுள்ளார். 
 
தனது கணவர் வாசு தன்னிடம் வரதட்சனை கேட்டு, தொல்லை கொடுப்பது குறித்து, 
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் சாவித்திரி புகார் அளித்தார். 
 
ஆனால், அந்த புகார் மீது முறையாக நடவடிக்கை எடுக்காத, அனைத்து மகளிர் காவல் துறையினர், வாசுவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகின்றது.
 
இதனால், மனவேதனையும், விரக்தியும் அடைந்த சாவித்திரி இது குறித்து தனது தாய் சாந்தியிடம் கதறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.  
 
இதனையடுத்து, தனது வீட்டில் இருந்து மண்எண்ணெய் கேனோடு, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற சாந்தி, அங்கு, தான் கொண்டு வந்த கேனை திறந்து மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். 
 
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர்  உடனே, சாந்தியை காப்பாற்ற, அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் உடலில் உள்ள பல பகுதிகளில் மளமளவென தீ பற்றியது. இதனால், சாந்தி படுகாயம் அடைந்தார். 
 
இதனையடுத்து, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக சாந்தி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார்.
 
காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.