வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (14:36 IST)

தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை: டி.எஸ்.பி மீது குற்றச்சாட்டு

தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் காயத்ரி.  உயர் அதிகாரி ஒருவர் இவரை திட்டியதால் மனமுடைந்து காவல் நிலையத்தில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலதிகாரி திட்டியதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து காயத்ரியின் கணவர் ஆறுமுகம் கூறியதாவது,

தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய எனது மனைவி காயத்ரியை டி.எஸ்.பி. தனது வீட்டு வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டாராம். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களாக எனது மனைவிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்பத்தியுள்ளார். இந்நிலையில் ஒருநாள் திடீரென போன் செய்த டி.எஸ்.பி என் மனைவியை திட்டினார். உடனடியாக நான் மனைவியிடமிருந்து போனை வாங்கி, என்ன இப்படி பேசுறீங்க என்று கேட்டபோது திடீரென போன் இணைப்பை துண்டித்து விட்டார். எனவே அந்த அதிகாரியின் கடுமையான டார்ச்சர் காரணமாகவே எனது மனைவி உயிரிழந்தார் என்று கூறினார்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.