வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2015 (12:28 IST)

காரில் சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல்

காரைக்காலைச் சேர்ந்த சாராய வியாபாரியின் மனைவியை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.
 
காரைக்கால் திருமலை ராயன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராமு என்கிற ராதாகிருஷ்ணன். இவரது மனைவி வினோதா . அவருக்கு வயது 38. இவர்களுக்கு 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
சாராய வியாபாரியான ராமுவுக்கு ரூ.90 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசிக்கும் தொடர்பு ஏற்பட்டது. சொத்தின் ஒரு பகுதியை எழிலரசி பெயருக்கு எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் எழிலரசியை 2 ஆவது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராமு, எழிலரசியுடன் அருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காரைக்கால் பகுதியில் அவர்களை வழிமறித்த கும்பல் ராமுவை வெட்டி கொலை செய்தது.
 
இந்தத் தாக்குதலில், எழிலரசி காயத்துடன் உயிர் தப்பினார். அதைத் தொடர்ந்து, வினோதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவர் தனது குழந்தைகளுடன் சென்னைக்கு வந்துவிட்டார். இங்கு தனது தங்கை பிரியா வீட்டில் தங்கி இருந்தார். ராமு கொலை தொடர்பாக வினோதா, அவரது தங்கை கணவர் ஆனந்த், ராமு நண்பர் அய்யப்பன், வைத்தியநாதன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கு பதிவு செய்த சில மாதங்களில் அய்யப்பனை மர்ம கும்பல் கொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக எழிரலசி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார்.
 
இந்நிலையில் சொத்து சம்பந்தமாக சென்னையில் இருந்து திருமலைராயன் பட்டினம் வந்த வினோதா நேற்று மதியம் காரில் சென்னை திரும்பினார். காரை கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் ஓட்டி சென்றார். அதில் வினோதாவின் தங்கை கணவரின் நண்பர் நவநீத திருஷ்ணனும் உடன் சென்றார்.
 
அவர்கள் சென்ற வாகனம், சீர்காழி புறவழிச் சாலை உப்பனாற்று பாலம் அருகே சென்ற போது இந்த காரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு கார், வினோதாவின் காரை வழிமறித்தது. பின்னர் 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்த காரில் இருந்து இறங்கியது. அவர்கள் அனைவரும் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
அந்தக் கும்பல் வினோதினியின் காரை அடித்து நொறுக்கினர். ஓட்டுநர் மற்றும் காரில் வந்தவரை அரிவாள் முனையில் மிரட்டினர். பின்னர், காரில் பின் சீட்டில் இருந்த வினோதாவை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. மேலும், அவரை, தரையில் இழுத்து போட்டும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து, தப்பி ஓடி விட்டது.
 
இந்நிலையில், இந்த கொலை குறித்து வினோதாவின் தங்கை கணவர் ஆனந்த் சீர்காழி காவல்துறையினரிடம் புகார் செய்தார்.  இதைத் தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக எழிலரசியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கொலையாளிகள், அவர்கள் ஓட்டிவந்த காரை கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே நிறுத்திவிட்டு  சென்றுள்ளனர். அதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி பதிவு எண் கொண்ட அந்த காரின் நம்பர் பிளேட் போலியாக மாற்றப்பட்டு இருந்தது என்பது காவல்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.