வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (15:30 IST)

பிரசவத்தில் தாயும் சேயும் பலி ; தவறான சிகிச்சை காரணமா? : கரூரில் பரபரப்பு

பிரசவத்தில் தாயும் சேயும் பலி ; தவறான சிகிச்சை காரணமா? : கரூரில் பரபரப்பு

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த தாயும், குழந்தையும் தவறான சிகிச்சையால் பலியானதாக கூறி, அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா, தரகம்பட்டி வழியாக செல்லும் மருவத்தூர் பகுதியை சேர்ந்த முருகன்(38). இவர் அப்பகுதியில் எலக்டிரீசினியனாக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி தங்கம்மாள்(35) இவர்களுக்கு ஏற்கனவே, ஐந்து  பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தங்கம்மாள் தற்போது கர்ப்பிணியாக இருந்து வந்தார். 
 
நேற்று மாலை கரூர் அருகே உள்ள மைலம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஆண் குழந்தை பிறந்ததோடு, அப்போது அந்த பெண்ணிற்கு பிரவத்தின் போது தேவையான வசதிகள் இல்லாததால் கரூர் மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
ஆனால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லாத காரணத்தினால் தாயும், சேயும் இறந்துள்ளனர். இச்சம்பவம் அறிந்த அவர்களது உறவினர்கள் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நேற்று மாலை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. 


 

 
இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் அப்பெண்மணி இறந்ததாகவும், அரசு மருத்துவரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தில் ஐந்தும் பெண் குழந்தைகள் என்பதால் அவர்களின் படிப்பு செலவு, திருமண செலவு உள்ளிட்ட ஏராளமானவைகளை அரசே நடத்த வேண்டுமென்றும், கோரிக்கை விடுத்ததோடு, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் ஐந்து பெண் குழந்தைகளோடு, சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நீடித்தது.
 
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலைமறியலால் கரூர் டூ புறநகர் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும் இவர்களது தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பொதுமக்களை போலீஸார் மடக்கி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகமே சுமார் 15 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.