வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (08:42 IST)

உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 1½ கிலோ தங்கத்தைக் கடத்திய பெண்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து 1½ கிலோ தங்கத்தை கடத்தி வந்த பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுகின்றன. கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது.
 
அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த அமீனாபீவி சிக்கந்தர் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது அவர் அடிக்கடி சிங்கப்பூர், மலேசியாவிற்கு சென்று வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்த உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை.
 
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை கண்டு பிடித்தனர். ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அமீனாபீவியை கைது செய்தனர்.
 
பின்னர் அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அடிக்கடி வெளிநாடு சென்று தங்கம் கடத்தி வந்தால், விமான டிக்கெட், செலவுகள் போக தனக்கு ரூ.10 ஆயிரம் பணம் தருவார்கள் என்று கூறினார். மேலும் இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கடந்த ஒரு வாரத்தில் 15 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.