வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (01:37 IST)

ஊழல் அமைச்சர்களுக்கு தண்டனை நிச்சயம்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

ஊழல் அமைச்சர்களுக்கு தண்டனை நிச்சயம்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திமுக ஆட்சி அமைந்தால், அதிமுக ஆட்சியில் தவறு செய்த அமைச்சர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரப்படும் என மு.க.ஸ்டாலின் ஆவேசம் காட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த ஐந்தாண்டு கால மக்கள் விரோத அதிமுக ஆட்சியின் இமாலய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. எல்லா துறைகளிலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
 
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிக மோசமான ஊழல் ஆட்சி இது. அலுவலக உதவியாளர், சத்துணவு அமைப்பாளர் முதல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் நியமனம் வரை எங்கும் ஊழல்; எல்லாவற்றுக்கும் கமிசன் என்பது ஜெயலலிதா ஆட்சியில் எழுதப்படாத விதியாக மாற்றப்பட்டுவிட்டது.
 
சூரிய ஔி மின்சாரக் கொள்முதலில் சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது.
 
மற்ற மாநிலங்களைவிட கூடுதல் விலை கொடுத்து தமிழகத்தில் மின்சாரம் கொள்முதல் செய்வது, ஆட்சியாளர்கள் ஆதாயம் அடைவதற்கான பகல் கொள்ளை என்று கடந்த ஆண்டே நான் ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டி இருந்தேன்.
 
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6.41 என்ற விலைக்கு 52 நிறுவனங்கள் விநியோகம் செய்ய முன்வந்த நிலையில், அவர்களது ஒப்பந்தப் புள்ளியை நிராகரித்துவிட்டு, யூனிட் மின்சாரத்தை ரூ. 7.01 என அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு அதிமுக அரசு முன்வந்தது.
 
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினரது ஆட்சேபத்தையும் மீறி நடந்த இந்த கொள்முதலில் ஆட்சியாளர்கள் பெரும் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள். தனியார் நிறுவனம் ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஔி மின் திட்டத்தை நிறுவுவதற்காக நிலம் வாங்குவதிலும்கூட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். விவசாயிகள் நிர்பந்தப்படுத்தப்பட்ட புகாரும்கூட உண்டு.
 
 
 
 

ஏறத்தாழ ரூ.25,000 கோடி அளவிலான ஊழல் விவகாரத்தைப் பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை வரவேற்கிறேன். பதவியில் இருக்கும் மூத்த அமைச்சர் ஒருவர் மீதான புகாரில் உண்மை வெளிவர வேண்டும், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமானால் அவரைப் பதவியில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும். இல்லையேல் இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தால் உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது.
 
இதுபோன்ற மெகா ஊழல்களில் ஈடபட்டு ஆட்சியாளர்கள் சம்பாதித்த பணம்தான் இப்போது வாக்காளர்களுக்கத் தருவதற்காக தமிழக வீதிகளில் ஆறாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே குடோன்களிலும் ஆம்புலன்ஸ்களிலும் பிடிபடும் கோடிக்கணக்கான பணம், இதுபோன்ற மெகா ஊழல்களில் ஈடுபட்டு ஆட்சியாளர்கள் கொள்ளையடித்த பணம்தான்.
 
அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மின்சாரத் துறை மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலும் நடைபெற்றுள்ள ஊழல் பணத்தைக் கொண்டு மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற மமதையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கிறார்.
 
திமுக ஆட்சி என்றால் வளர்ச்சிக்கு ஊக்கம், செம்மையான நிர்வாகம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை என்பதையும், அதிமக ஆட்சி என்றால் தான்தோன்றித்தனமான ஊழல், வளர்ச்சியில் பின்னடைவு மற்றும் எதேச்சாதிகாரம் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு இன்னொர வாய்ப்பைத் தந்தால் தமிழ்நாட்டைப் புதைகுழிக்கு அனுப்பி விடுவார்கள்.
 
அம்பலமாகியுள்ள மின்சாரக் கொள்முதல் ஊழல், ஒரு பெரும் பனிப்பாறையின் சிறு துளி மட்டுமே. அதிமுக ஆட்சியின் ஊழல்கள் தோண்டத் தோண்ட ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் இவற்றை மூடிமறைத்தாலும், விழிப்புள்ள தமிழக மக்கள் இந்த அவலத்தை நன்காக அறிந்துள்ளனர்.
 
அமையவுள்ள திமுக அரசு தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனையைப் பெற்றுத்தரும். நேர்மையான நல்லாட்சியை வழங்கும் என தெரிவித்துள்ளார்.