1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2016 (09:10 IST)

காட்டு யானை தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இரண்டு தொழிலாளர்களை யானை மிதித்து கொன்றுள்ளது.


 


நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் மணிசேகர் மற்றும் ஈஸ்வரன். இவர்கள் இருவரும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். 
 
அப்போது ஒரு காட்டு யானை கூடலூர்-கோழிக்கோடு சாலையில் அவர்கள் இருவரையும் விரட்டியது. ஈஸ்வரன் ஓட முடியாமல் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
 
இந்நிலையில், சாலையோரம் இருந்த பள்ளத்தில் மணிசேகர் குதித்து தப்பி ஓடினார். ஆனால், அந்த காட்டு யானை ஈஸ்வரனை விட்டு விட்டு, மணிசேகரை துரத்தியது.
 
அப்போது, மணிசேகரன் அந்த காட்டு யானையிடம் பிடபட்டார். அப்போது, தேயிலை செடிகளுக்கு இடையே மணிசேகரை தூக்கி வீசி மிதித்து கொன்றது. 
 
உயிர் தப்பிய ஈஸ்வரன் அருகில் இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் இது குறித்து கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார்.
 
இது குறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
 
பின்னர் மணிசேகரின் உடலை காவல்துறையினர் எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் அவருடைய உடலை எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
மேலும், காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மணிசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதியைச் சேர்ந்த காவலாளி கர்ணன் என்பவர் தேயிலை செடிகளுக்கு இடையே இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
 
அதைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறைனர் கர்ணன் யானை மிதித்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
 
இந்த சம்வங்களால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். யானைகள் பொதுமக்களை தாக்காமல் தடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.