வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (18:10 IST)

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள திருமாவளவன், “மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியபோது இது நீடிக்காது என்றார்கள். நீடிக்கிறது! நிலைக்காது என்றார்கள் நிலைத்துவிட்டது. இப்போது வாய்க்கு வந்தபடி உளறுகிறார்கள்; வெற்றிபெறாது என்கிறார்கள்.
 
இப்போது கேலி செய்பவர்கள், கிண்டல் பேசுபவர்கள், ஏளனம் செய்பவர்களுக்கெல்லாம் தேர்தல் முடிவு வாய்ப்பூட்டு போடும். நமது அணி கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற நமது கனவும் அன்றைக்கு நிறைவேறும். நமது அணியின் முதலமைச்சராக விஜயகாந்த் புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியை ஏற்றுவார்.
 
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றம் நிகழும். மக்கள் நலக்கூட்டணி தேமுதிகவோடு ஒப்பந்தம் செய்துக்கொண்டதை சிலர் விமர்சிக்கிறார்கள். சிலர் முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவனை முன் நிறுத்தாமல் விஜயகாந்தை நிறுத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
 
அவர்களுக்கு எனது பதில், கேப்டன் விஜயகாந்த் முதல்வரானால் அது திருமாவளவன் முதல்வரானதாகத்தான் அர்த்தம். முதலமைச்சர் நாற்காலியில் விஜயகாந்த் அமர்ந்தால் அது ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வழிசெய்யும்.
 
கூட்டணி ஆட்சிக்கு உடன்படாதவர் எம்ஜிஆர். கூட்டணி ஆட்சி பற்றியே பேசாதவர் ஜெயலலிதா, கருணநிதியோ எந்த காலத்திலும் ஒத்துக்கொள்ளமாட்டார். ஆனால், கூட்டணி ஆட்சி அமைத்து அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முன்வந்துள்ள எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த், முதலமைச்சருக்கு அனைத்து வகையிலும் தகுதியானவர்தான்” என்று கூறியுள்ளார்.