1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (22:35 IST)

ஜெயலலிதாவிற்கு ஏன் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது? - வழக்கறிஞர் ராஜீவ் தவான் கேள்வி

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 21 நாளில் ஜாமின் வழங்கியது பாரபட்சமான ஒன்று என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறியுள்ளார்.
 
முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதமும் விதித்தது. இதற்கிடையில் கடந்த 17ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
 

 
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 21 நாளில் ஜாமின் வழங்கியது பாரபட்சமான ஒன்று என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறியுள்ளார். மேலும், மேல்முறையீட்டுக்கான தயாரிப்பு வேலைகளை செய்வதற்காக ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றிருக்குமானால், இதேபோல கொலைக் குற்றவாளிகள், பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் மேல்முறையீட்டுக்கான தயாரிப்புகளை செய்வதற்கு ஜாமின் வழங்கப்படுமா என்றும் ராஜீவ் தவான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 
இது குறித்து டெய்லி மெயில் நாளிதழிலுக்கு ராஜீவ் தவான் எழுதியுள்ள கட்டுரையில், "சொத்துக்  குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நான்கு வருட சிறைதண்டனை விதித்தது. ஆனால் அக்டோபர் 17ஆம் தேதி அவரை உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
 
இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 21 நாட்களிலேயே ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருக்கிறார். நீதித்துறை வரலாற்றில் இது பெரிய ஆச்சரியம்தான். வேறு யாருக்கும் இவ்வளவு விரைவில் ஜாமின் கிடைத்து விடவில்லை. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். அதன் பின்னரே அவருக்கு ஜாமின் கிடைத்தது. லோக்தள கட்சித் தலைவர் சவுதாலாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு மாதங்களுக்குப் பின்தான் ஜாமின் கிடைத்தது.

ஜெயலலிதாவைப் போன்றே சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஓராண்டு சிறைவாசத்துக்குப் பின்தான் ஜாமின் கிடைத்தது. சத்யம் நிறுவன உரிமையாளர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருக்கிறார்.
 
ஆனால் 21 நாட்களிலேயே ஜெயலலிதா ஜாமின் பெற்றிருக்கிறார். அவர் மட்டுமல்ல அவருடன் தண்டனைக்கு உள்ளான சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் ஜாமின் கிடைத்திருக்கிறது. ஜெயலலிதாவுக்கு, அவரது வயது, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கூறியது ஜாமின் பெறுவதற்கு உதவியாக இருந்தாலும், மற்ற மூவருக்கும் இது பொருந்தாது.
 

 
ஜெயலலிதாவுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட பின் தமிழ்நாட்டில் நடந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாம் அரசியல் அரங்கேற்றத்தின் ஒரு பகுதியாகத்தான் தெரிகிறது. தீக்குளித்தும், மாரடைப்பு என்றும் பலர் இறந்துள்ளனர். ஊழல் அரசியல்வாதிகளுக்கும் உணர்ச்சிப் பிழம்பான அவர்களது அதிதீவிர தொண்டர்களுக்குமிடையான தொடர்பு எத்தகையது? இதுபோன்ற உணர்ச்சியாளர்களுக்கு உண்மையில் சட்டத்தின் ஆட்சி ஒரு பொருட்டே அல்ல.
 
நீதித்துறையைப் பொறுத்தவரை தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான பிரபலமான வழக்கு என்று எடுத்துக்கொண்டால் அது ஜெயலலிதா மீதான வழக்குதான். ஆனால் அவர் எப்படி இவ்வளவு  விரைவில் ஜாமீனில் விடுதலையானார்?
 
அவருக்காக வாதாடிய நாரிமன் வாதத்திறன் அதில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, வழக்கைச் சந்திப்பவர் அல்ல. மாறாக தண்டனை அடைந்தவர் என்ற அடிப்படையில்தான் கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. ஊழல் என்பது மனித உரிமையை மீறிய செயல் என்ற உச்சநீதிமன்ற கருத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் இதில் செயல்பட்டது. நாரிமன் வைத்த தனித்துவமான முதல்வாதம் என்னவென்றால்  மேற்முறையீட்டுத் தயாரிப்புக்காக ஜெயலலிதா சிறைச்சாலைக்கு வெளியே இருக்க வேண்டியுள்ளது என்பதுதான். இந்த வாதம் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. கொலைக் குற்றவாளிகளும் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும் இதே வாதத்தை முன்வைக்கலாம் அல்லவா?
 
கேள்வி என்னவென்றால் மேல்முறையீடு செய்வதற்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமின்வழங்கப்பட வேண்டுமா அல்லது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் மட்டுமே மேல்முறையீடு செய்வதற்கு ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டுமா? இந்த வாதம் அதன் அளவிலேயே மிகவும் விரிவானதும் தனித்துவமானதும் ஆகும். இரண்டாவது வாதம் என்னவென்றால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையே தவறானது என்பதுதான்.
 
ஜெயலலிதா தீர்ப்பை நிறுத்திவைக்க விரும்புகிறார். அப்படி  நடந்தால்தான் அவர் முதல்வராக முடியும், தேர்தலில் போட்டியிட  முடியும்.
 
இந்த தீர்ப்பு அதிமுகவினரைத் தவிர, மற்றவர்களின் பார்வையில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக, தாராளமாக உச்சநீதிமன்றம் நடந்துகொண்டது என்றுதான் எடுத்துக்கொள்ளப்படும். அதற்கான முகாந்திரம் இருப்பதாகவே தோன்றுகிறது.
 
ஜாமின்வழங்கும் விஷயத்தில், குறிப்பாக தண்டனையடைந்த பிறகு ஜாமின் வழங்குவதில் நமக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லை. இதனால் குற்றவாளி ஏழை, எளியோர் என்றால் நீதிபதிகள் பாரபட்சம் காட்டும் போக்கு இருக்கிறது" என்று  ராஜீவ் தவான் அதில் கூறியுள்ளார்.