செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (05:24 IST)

அம்மாவுக்கு என்னாச்சு ? சோர்ந்து போன அதிமுக தொண்டர்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ள சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
அதிமுகவும் சரி, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவும் சரி எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர்கள்.
 
அதே வேளையில் தனது மகிழ்ச்சியை எப்போதும் தொண்டர்களுடன் கொண்டாடும் வழக்கத்தை கடைபிடிப்பவர் ஜெயலலிதா. அந்த அளவு அவர் தொண்டர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
 
இந்த நிலையில் தான், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா அபரிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிமுகவினர் போயஸ் கார்டன் முன்பு வெற்றிக் கொண்டாட்டம் நடத்தினர். அப்போது,  தனது வெற்றியை தொண்டர்களுடன் பகிர்ந்து கொள்ள ஜெயலலிதா முன்வரவில்லை என கூறப்படுகிறது.
 
அதே போல, தமிழக தலைமைச் செயலகத்தில், எம்.எல்.ஏ.வாக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியானது. அப்போது அவரைக் காணலாம் என முக்கிய அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் காத்திருந்தனர். ஆனால், திடீரென பதவியேற்பு நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது.
 
மேலும், சென்னை வர்த்தக மையத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா, இப்தார் விருந்தில் கலந்து கொள்ள உள்ளார் என கூறப்பட்டது. ஆனால், இப்தார் விருந்துக்கும் ஜெயலலிதா செல்லவில்லை. இதனால் முஸ்லீம் மக்களும், அதிமுக பிரமுகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
 
இந்த நிலையில் தான், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 21 மாணவ மாணவிகளுக்கு, காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தலமைச் செயலகத்தில் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தியுள்ளார்.
 
ஆக, எப்போதும் தனது அரசியல் களத்தை சூடு தணியாமல் வைத்துக் கொள்வதில் ஜெயலலிதா மிக கவனமாகவே செயல்படுகிறார். ஜெயலலிதாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என அதிமுகவினர் உள்பட பலரும் ஆவலுடன் காத்துள்ளனர்.