1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2016 (13:43 IST)

ஆறுதல் கூட சொல்ல முடியாத முதலமைச்சர் இன்னுமா இருக்க வேண்டும்? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சாலையில் இறங்கி வந்து ஆறுதல் கூட சொல்ல முடியாத முதலமைச்சர் இன்னுமா இருக்க வேண்டும்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 

 
கரூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இளங்கோவன், ‘’நாம் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வருகிறார்கள். ஆளும் ஆட்சியாளர்கள் நமக்காக இல்லை என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ள மக்கள் காங்கிரஸ் கூட்டத்துக்கு வருகிறார்கள்.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது. சென்னையில் மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள்.
 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் ஆறுதல் கூட சொல்லவில்லை. சாலையில் இறங்கி வந்து ஆறுதல் கூட சொல்ல முடியாத முதலமைச்சர் இன்னுமா இருக்க வேண்டும்? 
 
மக்களை எப்போதும் ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருந்த தமிழகம் தற்போது கடைகோடிக்கு போய் விட்டது. லஞ்சம், கையூட்டு கொடுக்காமல் ஏதாவது வேலை நடக்கிறதா?
 
மக்களிடம் காங்கிரசுக்கு செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்வதை கண்டு அதனை கெடுக்க ஏற்கனவே தள்ளுபடியான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கை சோனியா, ராகுல் காந்தி மீது போட்டுள்ளார்கள். பாஜக ஆட்சியில் தொழில் நசிந்து போகிறது.
 
தமிழக அரசு மீது நான் ஊழல் பட்டியல் வெளியிட்டு 3 நாட்கள் ஆகிறது. உண்மையில் தைரியம் இருந்தால் என்மீது வழக்கு போடுங்கள். வாய் திறக்காமல் இருந்தால் மக்கள் மறந்து விடுவார்கள் என நினைக்காதீர்கள்.
 
தேர்தலின்போது உங்களுக்கு ரூ.500, ரூ.1000 என்று தருவார்கள். அது உங்கள் பணம். அதனை வாங்கி கொண்டு வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிப்பவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும்.
 
காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தங்கள் உயிரை விட்டு நாட்டை காப்பாற்றினார்கள். மத்திய பாஜக ஆட்சி இன்னும் ஓராண்டில் முடிவுக்கு வந்துவிடும். டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்பது உறுதியாகி விட்டது’’ என்று கூறினார்.