வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2017 (13:08 IST)

ஜெ.வை முன்னாள் முதல்வராக ஏன் அடக்கம் செய்தீர்கள்? - அப்துல் கலாம் ஆலோசகர் விளாசல்

மறைந்த முன்னாள் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றியவர் பொன்ராஜ். மேலும், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


 

தவிர, 2011 சட்ட மன்ற தேர்தலின் போது, அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனை பிரகாரம், பொன்ராஜ் தயாரித்துக் கொடுத்த தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை திட்டத்தை, அப்படியே ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து பொன்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை பின்வருமாறு:

33 ஆண்டு கனவை நனவாக்கி, அஇஅதிமுக பொதுச்செயலாளார் பொறுப்பினை ஏற்றிருக்கும் திருமதி V.K. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துகள்!

இன்றைய அதிமுகவில், உங்களை விட்டால் வேறு எவரும் சிந்தாமல், சிதறாமல் கட்சியைக் கட்டிக்காத்து, ஒற்றுமையாக வழிநடத்துபவர்களாக இல்லை. காரணம், அத்தகைய தலைவர்களை ஜெயலலிதா உருவாக்கவில்லை என்பதே உண்மை.

அதிமுக ஆரம்பிக்கப்பட்ட கடந்த 43 ஆண்டுகளாக பொதுமக்கள், எம்.ஜி.ஆரின் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்கள் அதிமுகவிற்கும், இரட்டை இலைக்கும் வாக்களித்து பெரும்பாலான வருடங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை காரணம் - அதிமுக என்றால் எம்.ஜி.ஆர். அவரும், ஜெயலலிதாவும் ஏழை எளிய மக்களுக்கானவர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள், நியாமானவர்கள், தவறு செய்தவர்கள் யாரேனும் தண்டனையில் இருந்து தப்பிக்க விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

அதற்கு இம்மியளவு கூட களங்கம் வராமல் பார்த்துக் கொண்டவர்கள். ஆனால் இவர்களும் ஊழல் குற்றச்சாட்டு என்ற விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இருந்தாலும் அவர்கள் மக்கள் மனதில் நிலைத்திருப்பது, அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு ஜாதி, சமய, மதம் தாண்டி பொதுவானவர்கள் என்பது தான். அது தான் ஜனநாயகம். அதனால் தான் எம்.ஜி.ஆர் மறைந்து 29 ஆண்டுகளுக்கு பின்பும் வாழ்கிறார்.

செல்வி ஜெயலலிதா இன்றைக்கு மறைந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அஞ்சலி செலுத்துகிறார்கள். நான் சந்தித்த பொதுமக்களின் உள்ளத்தில் எழுந்த கேள்விகளுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டபின், செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவை பற்றிய மக்களின் சந்தேகங்களுக்கு நீங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றீர்கள்.

கீழ்கண்ட சந்தேகங்களை நீங்கள் நிவர்த்தி செய்தீர்கள் என்று சொன்னால், செல்வி ஜெயலலிதா அவர்கள் வகுத்த நெறிகளில் எள் முனை அளவு கூட மாறாமல் கழகத்தை கட்டிக்காப்பேன் என்று நீங்கள் சொன்னதிற்கு மதிப்பு இருக்கும்.

இன்றைக்கு மக்கள் முன் உள்ள மிகப்பெரிய கேள்விகளுக்கு, இந்த பதவிக்கு வரும் முன் விடையளிப்பீர்கள் என்று பொதுமக்கள், உண்மையான கட்சிக்காரர்கள், மற்றும் பெரும்பாலானோர் எதிர்பார்த்தார்கள். ஆனால் பதவி ஏற்றபொழுது முதன் முறையாக நீங்கள் பேசிய போது கூட, அதிமுக செய்தி தொடர்பாளர்கள் சொல்லிய உண்மைக்கு புறம்பான தகவல்களையே தான் நீங்களும் சொன்னீர்கள்.

ஆம், முன்னால் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, அது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கடுமையான கருத்தாக வந்த பின்பும், 4 பேரால்தான் இந்த உண்மையை சொல்ல முடியும் என்ற நிலையில். யாரும் சொல்லவில்லை. ஒருவர் நீங்கள். மற்றொருவர் அப்பல்லோ டாக்டர் பிரதாப் ரெட்டி.

அப்பல்லோ ரெட்டி அறிவித்த அறிக்கைகளில், பேட்டிகளில் ஒன்றே ஒன்றுதான் உண்மை, அதுதான் செல்வி ஜெயலலிதா அவர்களது மரணம் பற்றிய, அறிக்கை.

அந்த அறிக்கையும் பெயரில்லா கையெழுத்து கொண்ட அறிக்கை. யாருடைய கையெழுத்து என்று தெரியவில்லை. கையெழுத்து போட்டு பெயர் கூட போடவில்லை. அன்றைக்கு நிகழ்ந்த மரணம் அது என்று சொல்வதில், பொறுப்பு ஏற்பதிலும் கூட எள் முனை அளவேனும் அப்பல்லோவிடமிருந்து உண்மை வெளிப்படவில்லையே? அப்படி யென்றால் அவரது மரணத்தை நாங்கள் அறிவிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தட்டிக்கழிக்கும் வகையில் அப்பல்லோ அறிக்கை விட்டதா?

உண்மையான மருத்துவ அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு தெரிவித்திருந்தால், இன்றைக்கு இந்த சந்தேக நிழல் வந்திருக்காது. மற்றொன்று மத்திய அரசு. அதுவும் மவுனம் காக்கிறது. அது அவர்களது அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம். எனவேதான், மக்களால் செல்வி ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணத்தை இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முழு உண்மையும் தெரிந்த நீங்கள், இதுவரை வாய் மூடி மவுனியாக இருந்தது ஏனோ? முதல்வர் இறந்த பின்பும் ஒரு விளக்க அறிக்கை உங்களிடம் இருந்து வரவில்லை. ஒரு அஞ்சலி அறிக்கை இல்லை, பதவி ஏற்கும் வரை மவுனம், ஆனால் பதவி ஏற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் உங்களது மேற்பார்வையில் செவ்வனே நடந்தேறி பதவியும் ஏற்றாகி விட்டது. உங்களது முதல் உரையிலும் மக்களது சந்தேகங்களுக்கு சரியான விடையில்லை.

முதல்வராக பதவி ஏற்பதற்குள் உங்களிடம் இருந்து உண்மை நிலையை விளக்கி அறிக்கை வருமா?

செல்வி ஜெயலலிதாவை நீங்கள் முன்னாள் முதல்வராக ஏன் அடக்கம் செய்தீர்கள்? அப்படி என்ன அரசியல் சட்ட சிக்கல் வந்துவிட்டது? உங்கள் 33 வருட தோழி, 1.5 கோடி தொண்டர்களின் தலைவி, தமிழக முதல்வராக அடக்கம் செய்யப்பட்டார் என்ற உரிமையை நீங்களும், திரு ஓ.பன்னீர்செல்வமும் ஏன் கொடுக்கவில்லை? நிறைவேற்றவில்லை? ஏன் அந்த உரிமையை பறித்தீர்கள்?

கடமையில் இருந்து விலகினீர்கள்? அதற்கான தேவை என்ன? அதற்கான அரசியல் சூழல் என்ன? நெருக்கடி என்ன? செல்வி ஜெயலலிதா அவர்கள் உங்களை சந்தித்த பின்பு தான், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், சொத்துக் குவிப்பு உட்பட அனைத்து வழக்குகளுக்கும் உள்ளானார் என்ற குற்றச்சாட்டில் உண்மையிருக்கிறதா, இல்லையா?

உண்மையில்லை என்றால், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்பு, நாங்கள் ஊழல் குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நீருபித்து விட்டு, நான் பதவி ஏற்றுக்கொள்கிறேன் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள் என்றால், நீங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உயரத்தில் வைக்கப்பட்டிருப்பீர்கள். அதற்குள் என்ன அவசரம்? அனைத்து அதிமுக விதிகளையும் மீறி பொதுச்செயலாளாராக பொறுப்பேற்க வேண்டும். உடனே முதல்வராக வேண்டும் என்ற அவசரம் ஏன்?

அப்படி என்ன அதிமுகவிற்குள் ஒரு நெருக்கடி வந்து விட்டதா? அப்படியா செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள், அதிமுகவை கட்டியமைத்திருக்கிறார்?

ஆமாம், அம்மா அவர்கள் இறந்தபின்பு ஒரு பேனர் வைக்காத, ஒரு அஞ்சலி விளம்பரம் செலுத்தாத பதவியில் இருப்போர் தான், சட்டைப்பையில் அம்மா படத்தை மாற்றிவிட்டு, உங்கள் படத்தை மாற்றியவர்கள், கால்களை மாற்றியவர்கள், காலண்டரை மாற்றியவர்கள் தான் உங்களை இன்றைக்கு உயரத்தில் வைத்து பேசுகிறார்கள்.

அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளார் என்று சும்மா பாசத்திற்காக சொன்னவர்கள், சின்னம்மாவா யார் அது என்று சொல்வதற்கு எவ்வளவு நாள் ஆகும். தீர்ப்பு வந்த பின்பு, இவர்களது வேடத்தை பார்க்க தமிழகம் காத்திருக்கிறது. அது வரை பொருத்திருந்தால், மக்கள் மத்தியில் நல்ல பெயராவது உங்களுக்கு கிடைத்திருக்கும். அதுவரை நீங்கள் பொறுக்க வில்லை.

ஆனால், ஒருவேளை உங்கள் எண்ணங்களுக்கு மாறாக தீர்ப்பு வந்தால், அப்போது நீங்கள் வருந்த வேண்டியது இருக்கும், இதைத்தான், ‘சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கு ஊரார் கால் பிடிப்பார்…..’ என்று பாட்டாகவே பாடிவிட்டார் எம்.ஜி.ஆர். அவருடைய பாடலை நினைவூட்டும் கூட்டம் தான் அன்று செல்வி ஜெயலலிதா அம்மாவை சுற்றியும் நின்றது, இன்றைக்கு அதே கூட்டம் தான் உங்களை சுற்றியும் நிற்கிறது.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு, தலைவிதியை நொந்து கொண்டு அதிமுகவின் உண்மைத் தொண்டன் தள்ளி நின்று அம்மாவிற்கு மவுன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறான். இவர்களை நம்புவதை விட்டு விட்டு, உண்மையான அதிமுக தொண்டர்களின் மனநிலை அறிந்து, நீங்கள் நடக்க உங்களுக்கு முடியுமா என்பது தெரியவில்லை.

ஆனால், அம்மாவை பதவிக்காவும், பணத்திற்காகவும் புகழ்ந்த அதே கூட்டம், இன்றைக்கு நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்றும் உங்களை வற்புறுத்துகிறது. நீங்கள் நாளையே முதல்வராகலாம். முதல்வராகி, வாழ்த்தையும் பெறலாம். ஆனால் அது நிலையானது இல்லை.

இன்றைக்கு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நீங்கள் பேசிய வார்த்தைகள், அனைத்தும் உண்மையென்றால், அதை மக்கள் நம்ப வேண்டும் என்றால், ஒன்றை நீங்கள் செய்ய முடியுமா? செல்வி ஜெயலலிதா அவர்களது சுயமாக சம்பாதித்த சொத்தை, அவர் ஒருவேளை உயில் எழுதியிராவிட்டால், அதை மக்கள் சொத்தாக அறிவிக்க உங்களால் முடியுமா? அவர் வாழ்ந்த வீட்டை, நினைவிடமாக அறிவிக்க முடியுமா?

33 வருடம் நீங்கள் அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களோடு இருந்து, இருவரும் பங்குதாரர்களாக சம்பாதித்த சொத்துக்கள், அவரது பெயரை பயன்படுத்தி நீங்கள் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் பொது மக்களுக்கு, பொது காரியத்திற்கு எம்.ஜி.ஆரைப்போல் அர்ப்பணிக்க உங்களால் முடியுமா? இல்லையென்றால், அவர் சம்பாதித்த சொத்தை அதிமுக கட்சிக்கு எழுதி வைக்க முடியுமா?

இதைச் செய்தீர்கள் என்று சொன்னால், இதய சுத்தியோடு உங்கள் முதல் கன்னிப்பேச்சை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதை செய்து விட்டு, உச்ச நீதி மன்ற வழக்கில் இருந்து குற்றமற்றவர்கள் நாங்கள் என்று நிரூபித்து விட்டு, முதல்வராக பதவி ஏற்பீர்கள் என்று சொன்னால், இன்றைக்கு நீங்கள் பேசிய முதல் கன்னிப்பேச்சில் உண்மையுள்ளது என்று அர்த்தம்.

செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா??????

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.