1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 4 மே 2016 (09:04 IST)

கருத்துக் கணிப்புகளை தேர்தல் ஆணையம் அனுமதிப்பது ஏன்? - முத்தரசன் கேள்வி

கருத்துக்கணிப்புகள் வெளியிட தடையிருந்தும் தற்போது வெளியாவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (2016) தொடர்பாக 04.04.2016 காலை 7 மணி முதல் 16.05.2016 மாலை 6.30 மணி வரையிலான காலத்தை வாக்குப்பதிவிற்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, அதனை அச்சு மற்றும் மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவற்றை தடைசெய்யப்பட வேண்டிய கால அளவாக அறிவித்துள்ளது.
 
ஆனால் தமிழ்நாட்டில் சில முன்னணி நாளிதழ்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வாக்காளர்களிடம் கருத்துத் திணிப்பு செய்து வருகின்றன.
 
குறிப்பாக தினத்தந்தி தொலைக்காட்சியும், நாளிதழும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், காலைக்கதிர் போன்ற ஏடுகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், தேமுதிக, மநகூ, தமாகா கூட்டணிக்கு எதிராகவும், கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இது தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் அப்பட்டமான அத்துமீறலாகும்.
 
தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து சார்பற்ற நடுநிலையோடு செயல்பட வேண்டிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலகம் அமைதி காத்து வருவது ஆயிரம் வினாக்களை எழுப்புகிறது. இது போன்ற கருத்துத் திணிப்புகள் வாக்காளர் மனவோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது வாக்காளர்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்கும் வாய்ப்புகளை தடுப்பதாகும்.
 
எனவே இது போன்ற கருத்துக்கணிப்புகளை உடனடியாக இந்தியத் தேர்தல் ஆணையம் தடைசெய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.