வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (20:19 IST)

ஏன் அப்துல் கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை? - ஜெயலலிதா விளக்கம்

ஏன் அப்துல் கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை என்பது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் 11–வது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானிகள், இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவராலும் போற்றப்பட்டவரும், அனைவரது நெஞ்சில் நிறைந்தவரும், தமிழகத்தின் தலைசிறந்த மைந்தருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மறைவினால் நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
 
ராமேசுவரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பத்தில் பிறந்து, உன்னத நிலையை அடைந்தவர் டாக்டர் அப்துல் கலாம். எதையும் விஞ்ஞானப் பார்வையுடன் அணுகிய டாக்டர் அப்துல் கலாம் இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உந்துசக்தியாக விளங்கினார்.
 
ஏவுகணை உருவாக்கம், அணுசக்தித் திட்டங்கள் ஆகியவற்றில் அவருக்கு மிகுந்த பங்களிப்பு இருந்த போதிலும், போலியோ பாதித்தவர்களுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவி ஆகியவற்றை உருவாக்கியதில் மன நிறைவு கண்டவர் அப்துல் கலாம்.
 
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் அப்துல் கலாம்.
 
அப்துல் கலாம் அவர்களது நல்லடக்கம், அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் 30.7.2015 அன்று நடைபெறவுள்ளது. அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது உத்தரவின் பேரில் இதற்கென அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு.
 
எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்குகொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இருப்பினும், எனது உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை.
 
எனவே, எனது சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (நிதி மற்றும் பொதுப்பணித்துறை), அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் (மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை), அமைச்சர் எடப்பாடி கே. பழனிசுவாமி (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மற்றும் வனத்துறை), அமைச்சர் பி.பழனியப்பன் (உயர்கல்வித் துறை), அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை), அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (வருவாய் துறை) ஆகியோரை ராமேசுவரம் சென்று இறுதி மரியாதை செலுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
மேலும், மறைந்த அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்னாரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான 30.7.2015 அன்று அரசு விடுமுறை அளிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.