வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2016 (20:53 IST)

தொடங்கியபோது அறிவித்தீர்கள், நிறுத்தும்போது ஏன் கூறவில்லை - கருணாநிதி கேள்வி

மதிய உணவுத் திட்டத்துடன் மாம்பழச் சாறு வழங்கப்படும் என்று அறிவித்த நீங்கள், இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்று இதற்கு முன்பே அரசின் சார்பில் ஏன் அறிவிக்கவில்லை? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:
 
கேள்வி :-  மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு ஆட்சி செய்வதால் தான்  தொடர்ந்து மக்கள் என்னை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்கியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
 
கருணாநிதி :-  ஜெயலலிதா  எந்தச் சக்தியை மூலதனமாகக் கொண்டு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். மக்கள் சக்திதான் மூலதனம் என்று ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய் என்பதை மக்களே உணர்வார்கள். மக்கள் சக்திதான் மூலதனம் என்றால், 98 இடங்களில் அ.தி.மு.க. தோற்றிருக்கிறதே, அங்கெல்லாம் மக்கள் சக்தி அவர்கள் பக்கம் இல்லை என்பது உண்மை தானே?
 
கேள்வி :- ஆளுநர் உரை மீதான விவாதத் திற்கு பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது என்று பேசியிருக்கிறாரே? 
 
கருணாநிதி :- முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரை வெளிவந்த அதே நாள் நாளேடுகளில் வந்துள்ள சில செய்திகளைக் கூற வேண்டுமானால், சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை; தளி அருகே வீட்டில் 4 பேரைக் கட்டிப் போட்டு 25 பவுன் நகை, 26 ஆயிரம் ரூபாய் கொள்ளை; ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் தாய், 3 மகள்கள் கொடூரக் கொலை; சென்னை நுங்கம்பாக்கம், புகைவண்டி நிலையத்தில் அதிகாலையில் பெண் என்ஜினியர் சுவாதி கொலை; கேளம்பாக்கம் அருகே வாலிபர் ராஜா கழுத்து அறுக்கப்பட்டு கொலை; அம்பத்தூரில் கிணற்றில் தள்ளி தாய் கொலை என்று 9 கொலைகள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன. 
 
விருதுநகர் மாவட்டத்தில், திருத்தங்கலில் உள்ள பெருமாள் கோவில் திருவிழா பத்திரிகையில் அமைச்சர் பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக அந்தக் கோவில் செயல் அலுவலரை அதிமுகவினர்  தாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
 
24-6-2016 தேதிய “தினமலர்” நாளேட்டில் “கொலையாய் நடக்கிறது;  பயமாய் இருக்கிறது - நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கும் கூலிப்படைகள் - நடுக்கத்தோடு வாழும் வட சென்னை மக்கள்” என்ற தலைப்பில் அரை பக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பற்றித்தான் எழுதியுள்ளது.
 
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு இவைதான் அடையாளமா?
 
கேள்வி :- பேரவையில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் கேள்விக்கு சத்துணவுடன் மாம்பழச் சாறு வழங்குவது உகந்த திட்டம் அல்ல என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
 
கருணாநிதி :- இதே முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு, இவருடைய தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தான் மதிய உணவுத் திட்டத்துடன் 200 மில்லி லிட்டர்  மாம்பழச் சாறு வழங்கப்படும் என்று அறிவித்து, அந்தச் செய்தி அப்போது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது.
 
அதைச் சுட்டிக்காட்டித்தான் கழக உறுப்பினர் செங்குட்டுவன் அந்தக் கேள்வியைக் கேட்டதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா “வாழ்க்கையில் பல கட்டங்களில் பலவற்றைக் கூறுகிறோம்.  அதைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்ட பிறகு கருத்தை மாற்றிக் கொள் கிறோம். அன்றைய தினம் மாம்பழச் சாறு வழங்கலாம் என்று நான் நினைத்தேன். அதன் பின்னர் மருத்துவர்கள் கூறிய ஆலோ சனைப்படி இப்படி மாம்பழச்சாறு வழங்கினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்று சொன்னார்கள். அதனால் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது என்று கூறியிருக்கிறார்.
 
முதலமைச்சர் பொறுப்பிலே இருப்பவர் இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை அறிவிக்கும் முன்பாக, மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்காமலா அறிவித்தார்? இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்று இதற்கு முன்பே அரசின் சார்பில் ஏன் அறிவிக்கவில்லை? முதலமைச்சர் அறிவித்தவாறு மாம்பழச்சாறு வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நினைத்துக் கொள்ளட்டும் என்பதற்காக அரசின் சார்பில் அறிவிக்காமல் இருந்தார்களா?