வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2015 (15:19 IST)

நரபலி விவகாரம் : 2 எலும்புக் கூடுகளில் தடயங்கள் சிக்கின

கிரானைட் குவாரியில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் ஆணுடையதா? பெண்ணுடையதா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சின்னமலம்பட்டியில் சட்ட ஆணையர் சகாயம் முன்னிலையில் எலும்புக்கூடுகளைத் தோண்டியெடுக்கும் பணி நடைபெற்றது.
 
இதில், மொத்தம் 8 எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடைசியாக தோண்டி எடுக்கப்பட்ட 2 எலும்புக் கூடுகளில், நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அனைத்து எலும்புக் கூடுகள் குறித்தும் தற்போது சோதனை நடந்து வருகிறது.
 
ஆணுடையதா? பெண்ணுடையதா? :
 
இதனிடையே எலும்புக் கூடுகள் தொடர்பாக தடய அறிவியல் துறையினரிடம் கீழவளவு காவல் துறையினர் 21 கேள்விகளை எழுப்பி பதில் கேட்டுள்ளனர்.
 
இவை மனித எலும்புகளா, புதைக்கப்பட்ட காலம், ஆணா, பெண்ணா, விஷம் எதுவும் கொடுக்கப்பட்டுள்ளதா, எலும்புகள் சிக்கிய இடத்தில் உள்ள மண்ணில் வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா, ஆயுதங்களால் தாக்கி இறப்பு ஏற்பட்டுள்ளதா என்பது உட்பட 21 கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.
 
கணவர் காணவில்லை என புகார்:
 
இதனிடையே, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள கல்வெட்டிமேடு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஆர்.ஜெயலலிதா என்பவர், கீழவளவு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
 
அதில், ”தனது கணவர் ரவி (45), கொஞ்சம் மனநலம் சரியில்லாதவர் என்றும், மேலும், அவர் மூலிகைத் தைலங்களை தயாரித்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்த நிலையில், என்ன ஆனார்? என்பது தெரியாத நிலையில், அதுபற்றி புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை” என்று கூறியுள்ளார்.