வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (10:39 IST)

அம்மா, அப்பாவே என்னை நம்பாதப்போ, உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்? - சிக்கியது வினுப்பிரியா கடிதம்

தனது புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதை அடுத்து, ஆசிரியை வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவருடைய கடிதம் சிக்கியுள்ளது.
 

 
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கனசாலை புவன கணபதி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் வினுப்பிரியா. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரின் புகைப்படங்கள், மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்பிரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் காவல்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வினுப்பிரியா அவமானம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள விவாகரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அதில் “முதல்ல நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க; என்னோட லைப் போனதுக்கு அப்பறம் நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன்; எனக்கு வாழ பிடிக்கல; என்னோட அம்மா, அப்பாவே என்னை நம்பாதப்போ, நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?
 
அவங்களே என்ன பத்தி கேவலமா பேசுறாங்க, சத்தியமா சொல்றேன், நான் என் போட்டோசை யாருக்கும் அனுப்பல; நான் எந்த தப்பும் பண்ணல; பிலீவ் மீ.. ஒன் செகண்ட் சாரி.. சாரி.. பை” என்று வினுப்பிரியா கூறியுள்ளார்.
 
அண்ணாதுரை தனது ஸ்மாட் போனில் உள்ள வாட்ஸ்அப்பில் மகள் வினுப்பிரியாவின் படத்தை புரொபைல் படமாக வைத்துள்ளார். அந்த படத்தை தான், விஷமிகள் காப்பி செய்து மார்பிங்கில் ஆபாச படமாக சித்தரித்து இருக்கிறார்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.