1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (05:23 IST)

ஹெல்மெட் சுமையல்ல - தலையாயக் கடமை: சரத்குமார் கருத்து

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவதை சுமையாகக் கருதக் கூடாது. இதை தலையாயக் கடமையாகக் கருத வேண்டும் என  சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கக் கூடாது என்றும், பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும், பின்புறம் அமர்ந்து வருபவர்களுக்குக் கட்டாயமாக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தும், அறிக்கை கொடுத்தும், பேட்டி கொடுத்தும் வருகிறார்கள். 
 
இப்படிச் சொல்லியிருப்பதன் மூலம், அன்றாடம் ஏதாவது ஒரு செய்தி தங்களைப்பற்றி ஊடகங்களில் வரவேண்டும் என்பதைத் தவிர வேறு நல்ல எண்ணம் இவர்களுக்கு இருப்பதாகத் எனக்கு தெரியவில்லை. 
 
இது போன்ற கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க கூடாது. பொது மக்களும் இது போன்ற கருத்துக்களைப் புறக்கணிக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவதை சுமையாகக் கருதக்கூடாது. இதை தலையாய கடமையாக கருத வேண்டும்.
 
எதற்கோ செலவு செய்யும் நாம், நம் உயிர் காக்க சிறு நூறு ரூபாய் செலவு செய்ய யோசிக்கலாமா?. அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து சொல்வதைத் தவிர்த்து ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.