வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 24 டிசம்பர் 2014 (18:47 IST)

சென்னையில் இணையதள மையங்களில் ஆபாசப் படம் பார்க்க தடை

சென்னையில் செயல்படும் இணையதள சேவை மையங்கள் நடத்துவோருக்கு காவல் துறையினர் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
 
இணையதள சேவை மையங்கள் மூலம் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேற்றப்படுவதாக புகார்கள் வருகின்றன. தீவிரவாதிகள் கூட இந்த இணையதள சேவை மைங்கள் மூலம் தங்களது தகவல்களை பறிமாறிக் கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
 
மேலும் இணையதள மையங்களை ஆபாச படங்களை பார்க்கும் அரங்குகளாக மாறிவரும் நிலையைத் தடுத்து நிறுத்தும் வகையில் சென்னையில் செயல்படும் இணையதள சேவை மையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, இணையதள சேவை மையங்கள் போலீஸ் நிலையங்களில் முறையான அனுமதி பெற்றுதான் நடத்தப்பட வேண்டும்.
 
போலீஸ் அதிகாரிகள் இணையதள மையங்களில் அவ்வப்போது ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும். இணையதள சேவை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
 
இணையதள மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகையை முறையாக வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு முறையான அடையாள அட்டை இருப்பது முக்கியமானது.
 
வாடிக்கையாளர்களை ஆபாச படங்கள் பார்க்க அனுமதிக்க கூடாது. வாடிக்கையாளர்களை ஒரு சீட்டுக்கு ஒருவரைத்தான் உட்கார வைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் உட்காரும் இடங்களை மரத்தடுப்புகள் மூலம் மூடி வைக்காமல் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கை வசதிகளை செய்ய வேண்டும்.
 
வாடிக்கையாளர்களின் வருகை பதிவாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அதிக பட்சம் ஒரு மாதம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
 
வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்தால் குறிப்பாக வெளிநாட்டுக்காரர்களாக இருந்தால், உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும்.
 
தீவிரவாதிகள் இணையதள சேவை மையங்களை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள். எனவே வாடிக்கையாளர்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களை ரகசியமாக கண்காணிக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.