செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (19:10 IST)

விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய தலைவர்: உதயகுமார் கொந்தளிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தற்போது பல கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து காத்திருப்பது வேடிக்கையான விஷயம், மேலும், விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது கூறுகையில், "தமிழகத்தில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பணியை சரியாக செய்யாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகிறார். ஒரு நடிகரை எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தில் அமர வைத்தது மக்கள் தவறு. ஆனால் அவரை தற்போது பல கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து காத்திருப்பது வேடிக்கையான விஷயம், மேலும், விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர்.
 
தமிழகத்தில் மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை தற்போதைய அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், கெயில் நிறுவன ஒப்பந்தம், கூடங்குளம் அணுஉலை, மீனவர் பிரச்சினை போன்ற எதிலும் மக்கள் நலன் பற்றி தமிழக அரசு சிந்திப்பதில்லை.
 
உரிய நேரத்தில் இதனை தடுத்து நிறுத்தாமல் காலம் கடந்த பிறகு குரல் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல். தற்போதைய ஆளும் அதிமுக அரசு இதனை தான் செய்து வருகிறது. மேலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நாங்கள் போராடியதால் எங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
 
திமுக மக்கள் நலனுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருந்தாலும் அந்த கட்சியும் ஒரு குடும்பத்திற்காக மட்டும் சுயநலத்துடன் செயல்படுகிறது. எனவே தமிழக மக்கள் இந்த 2 கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.