வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (07:03 IST)

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மீண்டும் சிறப்பு முகாம்: சந்தீப் சக்சேனா

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 11 ஆம் தேதி மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.
 
 இது குறித்து சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. 01.01.2016 அன்றைய தேதியை வாக்காளராக தகுதி பெறும் நாளாக கணக்கிட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
 
இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதல் முகாமில் பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் நீக்கத்துக்காக 5.53 லட்சம் மனுக்கள் தரப்பட்டன.
 
இரண்டாவது முகாமில் 8.4 லட்சம் மனுக்கள் வந்தன. பெயர் நீக்கத்துக்கு மட்டும் 60 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. சிறப்பு முகாம் நடத்தப்படாத மற்ற அலுவலக வேலை நாட்களிலும் 51 ஆயிரத்து 897 பேர், பல்வேறு திருத்தங்களுக்காக விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
 
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் பற்றி அனைத்து மாவட்ட கலெக்டரிடமும் வரும் 9 ஆம் தேதியன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை செய்வேன். வாக்காளர்கள் கொடுத்துள்ள விண்ணப்பங்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அவர்களின் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
 
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும். பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்பட பல்வேறு திருத்தங்களுக்காக தரப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த நவம்பர் 24 ஆம் தேதிக்குள் இறுதி செய்வதற்கு உத்தரவிட்டுள்ளேன்.
 
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் 11 ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும். இணையதளம் வழியாக பலர் விண்ணப்பித்துள்ளனர். அப்படியும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிட்டால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.