வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (12:44 IST)

வாக்காளர் வண்ண அடையாள அட்டை அடுத்த மாதம் வழங்கப்படும் - பிரவீன்குமார்

வாக்காளர் வண்ண அடையாள அட்டை அடுத்த மாதம் வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:-

“தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 845 பேர் போட்டியிட்டனர். இவர்களில் சுமார் 150 பேர் தேர்தல் செலவுக் கணக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் சமர்ப்பிக்கவில்லை.

தற்போது இவர்களுக்கு அதற்கான நோட்டீசு அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதுவரை 15க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீசு அனுப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவு போன்ற உண்மையான காரணங்கள் கூறப்பட்டால் அதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும். அதுபோல் சரியான தேர்தல் செலவுக் கணக்கைக் காட்டாமல் போனாலும் அதுதொடர்பாகவும் நோட்டீசு அனுப்பப்படும்.

தமிழகத்தில் ஒரு வேட்பாளர் தாக்கல் செய்துள்ள செலவுக் கணக்கு, தேர்தல் ஆணையத்தின் செலவுக் கணக்கோடு ஒத்துப்போகவில்லை. அவரது பெயரை குறிப்பிட விரும்பவில்லை.

தமிழகத்தில் 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் உள்ளன. நகராட்சிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,400 பேரும், கிராமப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 பேரும் என வாக்காளர் உச்சவரம்பை நிர்ணயித்து வாக்குச்சாவடிகளை ஒழுங்குபடுத்த உள்ளோம்.

இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரை உயரும். புதிய வாக்குச்சாவடிகளை தேர்வு செய்யவும், அவற்றுக்கான மக்கள் கருத்தையும் பெறவேண்டும். இதற்கான பணிகள் நடக்கின்றன.

தமிழகத்தில் சுமார் 1,100 கல்லூரிகளில், ஒவ்வொரு கல்லூரியிலும் தேர்தல் ஆணையம் தனக்கான தூதராக சில மாணவர்களை நியமித்தது. இதில் கல்லூரியை முடித்துவிட்டு சிலர் சென்றிருக்கலாம்.

எனவே, அந்த இடத்தில் புதிய மாணவ தூதர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் மூலம் 18 வயது பூர்த்தியான மாணவர்கள் கண்டறியப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர். இதற்காக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக 11 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இம்மாத இறுதியில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு திட்டமிட்டு இருந்தோம். அடையாள அட்டை தயாரிப்புக்கான டெண்டர் முடிவு செய்யப்பட்டுவிட்டாலும், தயாரிப்புப் பணி இன்னும் தொடங்கவில்லை.

வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை போலியாக தயாரிக்க முடியாதபடி சில ரகசிய குறியீடுகளை அதில் சேர்க்க வேண்டியதுள்ளது.

அதன் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதலைப் பெற்று அவை தயாரிக்கப்படும். வரும் செப்டம்பர் 3 ஆவது வாரத்தில் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கும்.

நான் இந்தப் பதவியில் இருந்து விலகும் முடிவில் மாற்றம் செய்யவில்லை. எனது விஷயத்தில் இந்திய தேர்தல் கமிஷன் என்ன முடிவு எடுக்கவுள்ளது என்பது தெரியவில்லை.“ இவ்வாறு  பிரவீன்குமார் தெரிவித்தார்.